அந்த குட்டி மீனுக்கு ஆயுள் கெட்டிதான். அரை மயக்கத்திலிருந்த அந்த மீனை, மீன் வளர்ப்பதற்காக வெட்டி வைத்திருந்த சிறிய குட்டையில் விட்டு உயிரூட்டி அழகு பார்த்தான் சதீஷ். அவன் சென்றதும் அந்த குட்டையில் ஏற்கனவே வாழ்ந்து வந்த மூன்று மீன்களும், ஒரு தவளையும், ஒரு நண்டும் இந்த புதிய வரவை விசாரிப்பதற்காக அதனருகே கூடின. புதிய வரவை காண்பதில் அவர்களுக்கு ஏக சந்தோஷம்.
“உன் பேரென்ன”
“ரஃபி”
“நான் சென்னல், இது கெலுத்தி, இது வெளவால், அது தவளை அண்ணா, அது நண்டு. எங்களலெல்லாம் பார்த்து பயப்படாத, நாங்க உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம்”
“ஏன் எதுமே பேச மாட்ற, உம்முன்னே இருக்க” கெலுத்தி கேட்டது
“புது இடம்ல, ஆரம்பத்துல எல்லாருக்கும் அப்டிதான் இருக்கும். போக போகதான் சரியாகும், நீ கூடதான் இங்க வந்த புதுசுல ஊம கொட்டான் மாதிரி இருந்த, இப்ப என்ன போடு போடுற” நண்டு நகைச்சுவையாக சொன்னது
“நான் எப்டி இங்க வந்தேன்” அந்த சின்ன நகைச்சுவையைக் கூட ரசிக்கும் நிலையில் இல்லாத ரஃபி ஸீரியசாக கேட்டது.
“அதோ அக்காவும், தம்பியும் கதை அடிக்கிற சத்தம் கேக்குதே, அந்த சதீஷ்தான் உன்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போனான்” வெளவா மீன் சொன்னது
“எப்டிக்கா உயிரோட இருக்குற மீன வாங்கிட்டு வந்த, நான் உயிர் மீன் கிடைக்காதுன்னு நெனச்சேன்”
“நானும் அப்டிதான்டா நெனச்சுப் போனேன், ஆனா இன்னைக்கு மீன் மார்க்கெட்ல கூட்டமே இல்ல, அதனால ஒவ்வொரு கடையா பார்த்துட்டு வந்தேனா, ஒரே ஒரு கடையில மட்டும் உயிரோட மீன் இருந்துச்சு. அந்த கடையிலேயே வீட்டுக்கு மீன் வாங்கிகிட்டு, இந்த குட்டி உயிர் மீன ஃப்ரியா வாங்கிட்டு வந்துட்டேன்”
“தேங்ஸ்க்கா”
“இப்பதான் எனக்கே புரியுது, நான் மீன் மார்கெட்ல மயங்கி விழுந்ததுக்கப்புறம் இதான் நடந்துருக்கா, பொழுது போறதுக்குள்ள என் நீனா கூட எப்டி மறுபடி சேரப் போறேன்”
“நீனா யாரு” நண்டு கேட்டது
“என்னோட உடல், பொருள், ஆவி எல்லாமே அவதான்”
“மீன் மார்கெட்டுக்கு எப்டி வந்த”
“நாங்க கடல்லதான் வாழ்றோம். வழக்கம் போல இன்னைக்கு காலையில இரை தேடிப் புறப்புட்டப்ப.....”
“நீனா நான் இரை தேட போயிட்டு வரேன், பாத்து சூதானமா இருந்துக்கோ”
“இன்னைக்கு நானும் உங்க கூட வரட்டுமா”
“வேணான்டா செல்லம், இரை தேடி போறப்ப உயிருக்கே கூட ஆபத்து வரலாம் .தூண்டில், வலையிலலாம் சிக்காம அவங்க போடுற இரைய நேக்கா எடுத்துட்டு வரனும்.உனக்கு அதெல்லாம் தெரியாது. அதெல்லாம் ரிஸ்க், நான்னா எப்டியும் சமாளிச்சுருவேன். நீ பத்திரமா இங்கயே இரு. நான் போயிட்டு வரேன்”
“சரி..., பாத்து போயிட்டு வாங்க”
“ஆனா இன்னைக்கு காலையில கொஞ்சம் அசால்ட்டா இருந்ததால, வலையில சிக்கிட்டேன். எல்லாரோடயும் சேர்த்து என்னையும் பிடிச்சு கொண்டு வந்துட்டாங்க. மார்க்கெட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல தண்ணீ இல்லாததுனால மயக்கம் வந்துடுச்சு, முழுச்சுப் பாத்தா இங்க இருக்கேன்”
”அப்டினா நீ சாய்ங்காலம் திரும்பி வருவன்னு அங்க நீனா நெனச்சுக்கிட்டுருக்காங்களா”
“ஆமா, நான் கண்டிப்பா திரும்பி போயே ஆகனும், என்ன விட்டா அவளுக்கு வேற யாருமே கிடையாது, அது என்ன மட்டுமே நம்பி வாழுற ஒரு ஜீவன்”
“புரியாம பேசாத, நீ மறுபடி உயிர் பொழச்சதே பெரிய அதிசயம். கடல் இங்கேருந்து எங்க இருக்குன்னு, இங்கயே வாழ்ற எங்களுக்கே தெரியாது. நீ வேற இந்த இடத்துக்கு புதுசு, எங்கனு கண்டுபிடிச்சு போவ”
“நீனாவ அங்க விட்டுட்டு என்னால வேற எங்கயுமே வாழ முடியாது, எனக்கு இது மறுபிறவி கிடைச்ச மாதிரி. நீனாவுக்காகதான் என் உயிர் என்ன விட்டு போகலன்னு நெனக்கிறேன், கண்டிப்பா நீனாவ மறுபடியும் பார்ப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
ரஃபியின் நெஞ்சில் இருந்த உறுதி அவர்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது.
“நீனா பாவம்தான், உன்னையே நம்பிக்கிட்டுருப்பா. ஆனா நீ இப்ப எங்க இருக்குறன்னே உனக்குத் தெரியாதப்ப எப்டி போவ. கடல்னு ஒன்ன நாங்கலாம் பார்த்ததே இல்ல. எங்களுக்கும் வழி தெரியாது” தவளை தன் வருத்தத்தை வெளிப்படுத்தியது.
ஆறும் அமைதியாக இருந்தன.
சென்னல் நியாபகப் படுத்திப் பார்த்ததுவிட்டு, “ஏய் நண்டு, நீ அடிக்கடி இந்த வீட்டுக்குப் பின்னால ஒரு வாய்க்கால் ஓடுதுன்னு சொல்வீல, அந்த வாய்க்கால் கடலுக்குதான போவும்?”
“நான் இங்க வரதுக்கு முன்னாடி அந்த வாய்க்கால்ல இருந்தது என்னவோ வாஸ்தவம்தான், ஆனா அது எங்க போய் முடியும்னுலாம் எனக்குத் தெரியாது”
ரஃபிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல் சொன்னது,“பரவால்ல, நான் அந்த வாய்க்காலுக்குப் போறேன். அதுக்கப்புறம் என்னங்குறத அப்புறம் பார்க்கலாம், ஏன்னா எப்டியும் இங்க இருந்து ஒன்னும் ஆகப் போறதில்ல”
“நீ அங்க எப்டி போவ, உன்னால தண்ணியில மட்டும்தான போவ முடியும்” கெலுத்தி கேட்டது
“கேள்வி மட்டும் கேட்கத் தெரிஞ்சு வச்சுக்க, உறுப்படியா ஏதாவது யோசனை சொல்றியா?” வெளவா மீன் கெலுத்தியிடம் கடுப்படித்தது
“ஒரு ஐடியா! ரஃபி, நீ தவள அண்ணா மேல ஏறிக்கோ, தவள அண்ணா ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி உன்ன போய் வாய்க்கால்ல விடட்டும், கொஞ்ச நேரம் கஷ்டமாத்தான் இருக்கும், தாக்கு பிடிச்சுக்கோ”
ரஃபி சந்தோஷமாக சரி என்றது.
“சரி என் மேல ஏறிக்க, கெட்டியா பிடிச்சுக்கோ”
மெதுவாக தவளை குட்டையிலிருந்து வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தது. குட்டையின் அருகில் பூனை ஒன்று வசமாக உட்கார்ந்திருந்தது. ஏறிய தவளை அப்படியே மெதுவாக குட்டைக்குள் இறங்கி விட்டது.
“ஏன் என்னாச்சு?”
“குட்டைக்கு வெளியில பூனை உட்காந்திருக்கு, இப்ப போனா மீனை கவ்விடும்”
பூனையும் அந்த இடத்தை விட்டு நகர்வதாய் தெரியவில்லை. ரஃபியின் மனம் கிடந்து தவியாய் தவித்தது.
“இப்ப நான் எப்டி போறது?”
“ஆரம்பமே சரியில்லையே, இவன் மறுபடி நீனாவ பார்ப்பானா?” கெலுத்தி கேட்டது.
“உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?” வெளவா மீன் கடுப்போடு கெலுத்தியை முறைத்தது
“என்ன எதுக்கு முறைக்கிற? பூனை உட்காந்திருக்கே, எப்டி தாண்டி போக முடியும்? அதான் கேட்டேன்”
“உங்க சண்டைய நிப்பாட்டுங்க மொதல்ல” சென்னல் பஞ்சாயத்துப் பண்ணியது.
சற்று நேரம்மெளனம் நிலவியது.
“பூனைக்கிட்டேருந்து தப்பிக்க நான் ஒரு வழி சொல்லட்டுமா?” யாரும் எதிர்பாராத வண்ணம் கெலுத்தியிடமிருந்து ஒரு யோசனை வந்தது.
“எதாவது உறுப்புடாத பேச்சு பேசுனீனா நான் வெறியாயிடுவேன் சொல்லிட்டேன்”
“ஏய் வெளவா, எப்ப பார்த்தாலும் அவன திட்டிக்கிட்டே இருக்காத. நீ சொல்லு கெலுத்தி” நண்டு வக்காலத்து வாங்கியது.
“இன்னைக்கு மீன் மார்க்கெட் போய் மீன் வாங்கிட்டு வந்திருக்காங்கன்னா என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“மீன் குழம்பு வைக்கப் போறாங்கன்னுதான அர்த்தம்”
“பார்த்தியா, இதுக்குதான் இந்த லூசு பயல பேச வேணாம்னு சொன்னேன்” வெளவா மீனுக்கு கடுப்பு ஏறியது.
“சொல்றதா முழுசா கேட்டுட்டுப் பேசனும். மீன் குழம்பு வச்சதும் அந்த வாசத்துக்கு இந்த பூனை கண்டிப்பா வீட்டுக்குள்ள போகும். அந்த கேப்ல தவளை அண்ணாவோட ரஃபி தப்பிச்சுப் போகட்டும், எப்டி?”
“ஏதோ உன் மண்டையிலயும் மசாலா இருக்குன்னு நிருபீச்சுட்ட” வெளவா மீனே கெலுத்தியை பாராட்டி விட்டது.
அதே போல் நடந்தது, பூனை நகர்ந்தது.
தவளை மேல் ரஃபி ஏறியது, தவளை குட்டைக்கு மேல் ஏறியது.
ரஃபி ஒருமுறை குட்டைக்குள் இருந்த தன் புதிய நண்பர்களை பிரிவதை எண்ணி கவலையுற்றுப் பார்த்தது.
“நீயும் நீனாவும் கண்டிப்பா சேருவீங்க, நம்பிக்கையோட சந்தோஷமா போயிட்டு வா” நான்கும் வாழ்த்துச் சொல்லி அனுப்பியது.
“போயிட்டு வரேன் நண்டு, வரேன் சென்னல், வரேன் கெலுத்தி, வரேன் வெளவா”
முதுகிலிருந்து கீழே விழாதபடி தவளை தன் ஒரு முன்னங்கையால் ரஃபியை அணைத்துப் பிடித்துக்கொண்டே தாவித்தாவி வாய்க்காலை அடைந்தது. ரஃபி தவளை முதுகிலிருந்து வாய்க்காலில் இறங்கியது.
“இந்த உதவிய நான் எப்பவும் மறக்க மாட்டேன் அண்ணா” கடைசி நேரத்தில் ரஃபிக்கு கண் கலங்கி விட்டது.
“பார்த்து போயிட்டு வா ரஃபி”
வாய்க்காலின் ஓட்டத்தில் வேகமாக நீந்தியது. ஆனால் வாய்க்கால் வந்து சேர்ந்த இடமோ கடல் அல்ல, குளம்.
“குட்டையிலிருந்து குளத்துக்குதான் வந்திருக்கோமா? அப்பவே நண்டு சந்தேகத்திலதான் சொன்னுச்சு.சந்தேகம் சரியாப் போச்சு. இப்ப என்ன பன்றது?”
“என்ன திருதிருன்னு முழிக்கிற? யார் நீ? உன்ன இங்க நான் பார்த்ததே இல்லயே” குளத்து மீன் விசாரனை நடத்தியது.
“என் பேரு ரஃபி, நான் கடலுக்குப் போகனும். வழி தவறி வந்துட்டேன், வழி சொல்றீங்களா?”
“கடலா, அதெல்லாம் எனக்குத் தெரியாது” முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட பேச்சு கொடுத்தது தப்பா போச்சே, எதுக்குடா வம்புன்னு நழுவியது.
குளக்கரையில் வந்து உட்கார்ந்தது ஒரு மீன்கொத்தி. எங்கிருந்தோ பறந்து வந்து உட்கார்ந்ததைப் பார்த்து இதற்கு தெரிந்திருக்கக் கூடும் என்ற கணிப்பில் கேட்டது, “நான் கடலுக்குப் போகனும் வழி சொல்றீங்களா”
“வந்து உட்கார்ந்ததுமே வரவு வருதே” என்று நினைத்துக்கொண்டு ரஃபியைத் தின்ன திட்டம் தீட்டியது.
“கடல் இங்கேருந்து எட்டி இருக்கே, எப்டி போவ?”
தவளை மேல் சவாரி செய்தது போலவே செய்யலாம் என்ற நினைப்பில், “நான் உங்க மேல ஏறிக்கவா, என்ன தயவு செஞ்சு கொண்டுபோய் விட்டுறீங்களா?”
“மேல ஏற வேணாம். உச்சி வெயில் ரொம்ப கொளுத்துது, நீ என்னோட வாய்க்குள்ள ஒட்காந்துக்கயேன்”
“சரி”
மீன்கொத்தி வாயை திறந்தது.
இதையெல்லாம் அந்த குளத்து மீன் பரிதாபமாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அதற்கு மனசு கேட்கவில்லை.
“வாய்க்குள்ள போயிடாத... அது உன்ன சாப்பிட பாக்குது”
சத்தம் கேட்டதும் விறுக்கென்று பின் வாங்கி குளத்துக்குள் ஓடி வந்து விட்டது ரஃபி.
“கடைசி நேரத்துல கதைய கெடுத்துருச்சே” அந்த குளத்து மீன் மீது மீன்கொத்தி கங்கனம் கட்டிக்கொண்டது.
“என்ன ரஃபி இவளோ அப்பாவியா இருக்க, அது உன்ன சாப்பிட திட்டம் போடுதுன்னு கூட உனக்குத் தெரியலயா?”
“உண்மையாவே உதவி பண்றதுக்குதான் வாய்க்குள்ள கூப்பிடுதுன்னு நெனச்சேன், நல்ல வேள காப்பாத்திட்ட”
“சரி விடு, நீ கடலுக்குப் போறதுக்கு நான் ஒரு வழி சொல்றேன், இங்க பக்கத்துல ஒரு காடு இருக்கு, அத தாண்டி அந்த பக்கம் போயிட்டா அந்தாண்ட பக்கம் கடல்தான்”
“நான் எப்டி காட்ட தாண்டி போறது”
“காட்டுக்கு அந்த பக்கம் வீட்லேயிருந்து பொலங்குறதுக்கு தண்ணி எடுக்குறதுக்காக இங்க சாய்ங்காலம் ஒருத்தர் ரெண்டு பேர் நிச்சயம் வருவாங்க, அவங்க தண்ணி எடுக்க கொடத்த முக்குறப்ப கொடத்துக்குள்ள போயிடு. ஆனா அதுக்கப்புறம் நீ எப்டி கடலுக்குள்ள போறங்குறது உன் சாமார்த்தியம். சரியா?”
“என்ன பன்றதுன்னே தெரியாம இருந்த எனக்கு, இப்ப கடல்கிட்ட போற வரைக்கும் வழி காட்டுனியே அதுவே போதும்”
“இங்க வா, இந்த படித்துறை பக்கத்துலயே நின்னுக்கோ. குடத்த விடுறப்ப கரெக்டா போயிடு. போயிடுவியா?”
“ம், போயிடுவேன்”
“சரி, நான் போயிட்டு வரேன்”
குளத்து மீன் சொன்னது போலவே சாய்ங்காலம் ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்த போது தயாராகிக் கொண்டது ரஃபி. குடத்தை முக்கிய போது லாவகமாக அதனுள் சென்று விட்டது.
நடந்ததையெல்லாம் மீன் கொத்தி மறைந்திருந்து கவனித்துக் கொண்டு இருந்தது.
குடத்தைத்த தூக்கிக் கொண்டு காட்டு வழியே நடந்து போனாள். மீன் கொத்தியும் வெகு தூரம் வரை அவளை பின் தொடர்ந்து பறந்து சென்றது. இன்னும் கொஞ்சம் தூரம்தான் கடக்க வேண்டியிருந்தது.அந்த பயங்கரம் அப்போதுதான் நடந்தது.
“மீன் கொத்தி அவளுக்குத் தெரியாமல் அலேக்காக அந்த குடத்திலிருந்து மீனைக் கொத்திச் செல்ல குடத்தின் மேல் அமர்ந்தது”
அந்த காட்டில் ஏதோ அலறல் சத்தம் கேட்டு மீன் கொத்தி அதிர்ந்து போனது.அவளும் அறண்டு போனாள். அது அலறல் சத்தம் இல்லை, பிளிறல் சத்தம்.
மதம் பிடித்த காட்டு யானை ஒன்று அவளின் எதிரே கொஞ்சம் தூரத்தில் தாறுமாறாக ஓடி வந்து கொண்டிருந்தது. அவள் குடத்தை அப்படியே போட்டு விட்டு அறண்டு ஓடி விட்டாள். மின்னல் வேகத்தில் மீன்கொத்தி காணாமலே போய் விட்டது. குடம் விழுந்து தெறித்ததில், குடம் ஒரு பக்கம் கிடக்க; மீன் ஒரு பக்கம் சிதறி விழுந்து கிடந்தது. நல்ல வேளை காட்டில் மண், பொது பொதுவென்று பொதி மண்ணாக இருந்ததால் மீனுக்கு உடலில் அவ்வளவாக அடிபடிவில்லை. உயிரோடுதான் இருந்தது.
மீன் கிடக்கும் இடத்தை நோக்கிதான், அந்த யானையின் கால்கள் கடும் வேகத்தில் வந்து கொண்டிருந்தன. தன்னை நோக்கி நெருங்கி வருவதைப் பார்த்து ரஃபிக்கு ஈரக்குலை நடுங்கியது. யானையின் முன்னங்கால்களிலிருந்து தப்பித்த ரஃபி , வலது பின்னங்கால் தன்னை முழுவதும் மூட வந்ததை அதற்கு மேல் பார்க்கத் துணிவில்லாமல் கண்களை இறுக்கி மூடிக் கொண்டது. நூலிழையில் உயிர் தப்பித்தது. தறி கெட்டு ஓடிய ஓட்டத்தில், யானையின் கால்தடம் பதிந்த இடத்தில் அரையடி ஆழத்திற்கு ஒரு குழியே விழுந்து விட்டது. நூலிழையில் தப்பித்து அந்த குழியின் விளிம்பின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மீன் அடுத்த வினாடி அந்த குழிக்குள்ளேயே விழுந்து விட்டது. ஐந்து நிமிடம் கழித்துதான் கண் திறந்தது.கண் திறந்து பார்த்தால் இறுதிச்சடங்கிற்காக சவக்குழியில் கிடப்பதைப் போலவே இருந்தது ரஃபிக்கு.
“இனிமேல் யார் வந்து காப்பாற்றுவது?” சற்று நேரத்தில் தண்ணீர் இல்லாததால் வெறும் மண்ணில் தத்தளித்தது. “
இவ்வளவு தூரம் வந்தது இப்படி அனாதையாக சாகத்தானா” என்று நினைத்த மாத்திரத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சடசட வென ஒரு சத்தம். மழை ச்சோன்னு பெய்தது. குழியில் தண்ணீர் நிரம்பியது. தத்தளித்த மீன் தண்ணீரில் தன்னைக் கிடத்தியது. உயிர் எப்படியோ ஒட்டிக் கொண்டது. மழை நின்றது.
“ இந்த குழியிலிருந்து மீதி கொஞ்ச தூரத்தை எப்படி கடப்பது? இன்னும் கொஞ்சம் நேரம் போனால் இந்த குழியிலுள்ள நீரும் வற்றி காய்ந்து போகுமே” என கவலையுற்றது.
“இந்த இடத்தில் எந்தவொரு தவளை அண்ணாவோ வரப்போவதில்லை. இந்த குழியிலிருந்து கடலுக்கு நேராக வாய்க்காலுமில்லை. எவர் ஒருவரும் இந்த குழியில் குடத்தை முக்கி தண்ணீர் தூக்கப் போவதுமில்லை. இங்கிருந்து என்னை அலேக்காக தூக்கிச்செல்ல அந்த ஆண்டவனும் வரப்போவதில்லை. இனி என்ன செய்வது, நீனா உன்ன இனிமே பார்க்கவே முடியாதா, இதுதான் நம் விதியா?”
காலையிலிருந்து இதுவரை நடந்ததையெல்லாம் கண்முன்னே ஓடவிட்டது. “யாராரோ உதவி பண்ணுனாங்களே, என்னென்னமோ நடந்துச்சே, அதெல்லாம் இப்டி வந்து முடியத்தானா”
கண்கள் மூடி கவலையில் கருகியது.
அதனாலேயே நம்ப முடியாத அளவிற்கு அந்த அபார சிந்தனை பொறி தட்டியது.
“நாம இப்ப யானையோட கால் தடம் பதிஞ்ச குழியில உள்ள தண்ணியிலதான இருக்கோம், அப்டின்னா யானை நெடுக ஓடி வந்தப்ப அதோட கால்தடம் பதிஞ்ச எல்லா இடமும் குழியாதான இருக்கனும், அந்த எல்லா குழியிலயும் மழை பேஞ்ச தண்ணி தேங்கிதான நிக்கும், இங்கேருந்து கடல் வரைக்கும்தான் என்னால தரையில போக முடியாது, பக்கத்துக் குழி வரைக்கும் கூடவா போக முடியாது?”
“நீனா இதோ வந்துட்டேன்” சீறிப் புறப்பட்டுவிட்டது ரஃபி
தான் இருந்த குழியிலிருந்து வெளியே தாவி விழுந்தது. தரையில் தத்தளித்துக் கொண்டே அடுத்தக் குழியில் விழுந்தது. இப்படியே ஒவ்வொரு குழியாய் தாவியது. இடையிடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறியது. அதோ கடல் அதன் கண்ணில் பட்டுவிட்டது. தான் பழக்கப்பட்ட இடத்திற்கு வந்தாகிவிட்டது. யானையின் கால்தடம் வெகுதூரம் வரை இருந்தது. அப்படியே முன்னேறி வந்து கொண்டே இருந்தது.
இதோ இந்த ஓடை இருக்கிறதே. இதுல விழுந்து இனி ஈஸியா போயிடலாமே. ஒரு குழியில் இருந்து ஓடையில் தாவியது. அதற்குள் பொழுதும் சாய்ந்து விட்டது.
நேரே கடலுக்குள் நுழைந்தது. அப்பாடா நீனாவையும் பார்த்து விட்டது. நெடு நேரமாகியும் ரஃபியைக் காணாமல் நீனா அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.
“நீனா.....”
“ரஃபி... ஏன் இன்னைக்கு இவளோ லேட்? பயந்தே போயிட்டேன் தெரியுமா, அப்டி எங்கதான் போனீங்க?”
“சொல்றேன் வா...”