செல்வியின் மாமியார் தன் புதிய பேரக்குழந்தையைக் காண்பதற்காக வீட்டுத்திண்ணையில் ஆவலோடு காத்திருந்தார். செல்வியின் தாயாரும் அச்சமயம் தன் சம்மந்தி வீட்டில்தான் இருந்தார். செல்வி தன் கணவனுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனையிலிருந்தது வீடு வந்து சேர்ந்தாள்.
"வாமா செல்வி... என் வம்சம் தழைக்க பேரப்புள்ளய பெத்துக் கொண்டு வந்துட்டா.. சம்மந்தி, என் மருமகளுக்கு ஆரத்தி எடுங்க"
செல்வியின் தாயார் தன் பேரனைப் பார்த்த சந்தோஷத்தோடு உள்ளே சென்று ஆரத்தியை எடுத்து வந்தாள்.
"நீங்களும் சேந்து நில்லுங்க மாப்ள"
ஆரத்தியை எடுத்துக்கொண்டிருக்கும்போதே, "என் மருமகளுக்கு நான் செய்ய நெனச்ச கொடுமைக்கு, தெய்வத்தோட தண்டனையோ என்னவோ, மாடு முட்டி என்ன இப்டி செவத்தோட சாத்தி வைச்சிருச்சு"
"இந்த நேரத்துல எதுக்கு சம்மந்தி பழசெல்லாம்?" என்றவாறே "இந்தாங்க உங்க பேரன பாருங்க" என்று குழந்தையை சம்மந்தி மடியில் வைத்தாள்.
"இப்ப எப்டிம்மா இருக்கு?" கணேசன் நலம் விசாரித்தான்.
"முதுகுல இன்னும் வலி இருக்குடா, நடக்க கொள்ள முடியல"
செல்விக்கு தன் மாமியாரை நலம் விசாரிப்பதற்கு கூட நினைவு மட்டுப்படவில்லை.
"ஏம்மா செல்வி ஒரு மாதிரி இருக்க?"
"இல்லத்த, ஆபரேசன் பண்ணி மூனு நாள்தான ஆகுது, வலி இன்னும் கொறயல, பஸ்ல வந்தது வேற ஒரு மாதிரி இருக்கு" என்று சொல்லி சமாளித்தாள்.
"சரி, உள்ள போய் கட்டில்ல படுத்துக்க"
செல்வி வந்து கட்டிலில் சாய்ந்தாள், ஆனால் அவள் மனம் மட்டும் அம்மு-வின் நினைவாகவே இருந்தது.பழகிய ஏழே நாட்களில் ஏழேழு ஜென்மமானாலும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒரு பந்தத்தை ஏற்படுத்திவிட்டாள் அம்மு.
செல்வி பிரசவத்திற்காக கணவனுடன் தன் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தாள். கொடுக்கப்பட்ட நாள் முடிந்தும் பிரசவவலி எடுக்காததால், மறுநாளே செல்வி அந்த ஊர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, "இப்போதைக்கு டெலிவரிக்கான அறிகுறி இல்ல, ஒருவாரம் ஆகும், ஆனா தண்ணி சத்து அதிகமா இருக்குறதால, சவ்வு கிழியிறதுக்கு வாய்ப்பு இருக்கு, அதனால அட்மிஸன் போட்டுக்குங்க" என்றார் டாக்டர்.
"சரிங்க டாக்டர்"செல்வியின் அம்மாவும், கணேசனும் சம்மதித்தனர்.
அம்மு கலங்கிய கண்களுடம் கிளினிக்கை விட்டு வெளியே வந்தாள். அம்முவின் கணவன் அருண் பதட்டத்துடன் ஓடிவந்து கேட்டான்
"என்னாச்சு அம்மு, ஏன் அழுவுற?"
"டாக்டர் ஸ்கேன் பண்ணி பாத்தாங்க, தண்ணி சத்து ரொம்ப கம்மியா இருக்காம், உடனே குழந்தைய ஆபரேசன் பண்ணி எடுக்கனுமாம், இல்லனா ஆபத்தாம், உடனே அட்மிஸன் போட்டுக்க சொல்றாங்க"
"போன மாசம் ஸ்கேன் பண்ணிபாத்துட்டு எல்லாம் கரெக்டா இருக்குன்னுதான சொன்னாங்க, இப்ப என்ன திடீர்னு இப்டி சொல்றாங்க?"
"என்னன்னு தெரியல, எனக்கு பயமா இருக்கு அருண்"
"நீ தேவயில்லாம எதயும் போட்டு கொழப்பிக்காத, ப்ரைவேட்ல காசுக்கு ஆசைப்பட்டு ஆபரேசன் அது இதுன்னு இழுத்துவிடப் பாப்பாங்க"
நாம G.H-ல போய் எதுக்கும் செக் பண்ணிப்போம்"
அம்முவும், அருணும் பதட்டத்துடன் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
"அம்மு, அந்த கவுன்டர்ல பேரு, வயசு சொல்லி சீட்டு வாங்கிக்க"
"செல்வி, வயசு 22".
அம்மு என்பது செல்லமாக கூப்பிடும் பெயர் என்பதால், தன் நிஜப்பெயர் செல்வி என்பதை சொல்லி சீட்டு வாங்கினாள்.பிரசவ வார்டுக்குள் நுழைந்து மருத்துவரைப் பார்த்தனர். அருண் தன் பையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டி விஷயத்தைச் சொன்னான்.
"இதுல ஸ்கேனுக்கு எழுதிருக்கேன், மாடியில போய் ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வாங்க, பார்ப்போம்"
ஸ்கேன் எடுத்து வந்து டாக்டரிடம் காட்டினர்.
"தண்ணி சத்து ரொம்ப கம்மியாதான் இருக்கு, அட்மிஸன் போட்டுக்குங்க, தண்ணி சத்து ஏறுறதுக்கு bottle போட சொல்றேன், நாளைக்கு காலைல எப்டி இருக்கு, ஏறுதா என்னன்னு பார்ப்போம். இல்லன்னா ஆபரேஷன் பண்ணி குழந்தைய எடுத்துறதுதான் நல்லது. இந்த ஃபார்ம்ல ஒரு ஸைன் பண்ணிடுங்க சார்"
"கையெழுத்து எதுக்கு டாக்டர்?"
"Operation formality-க்குதான். முடியாத பட்சத்துக்கு கடைசி கட்டமாதான் ஆபரேசன் பண்ணுவோம். ஒன்னும் பயப்படவேண்டியதில்ல"
தயக்கத்துடன் கையெழுத்துப் போட்டுக்கொண்டே கேட்டான் "தண்ணி சத்து எவளோ டாக்டர் இருக்கனும்?"
"8-18 c.m இருக்கனும், உங்க wife-க்கு 3 c.m தான் இருக்கு"
"3 c.m இருக்குறதால பயப்பட வேண்டியதில்லைல டாக்டர்?" பயத்துடன் கேட்டாள் அம்மு.
“குழந்தைய சுத்திலும் குறிப்பிட்ட அளவு ஒரு திரவம் இருக்கும், அந்த திரவம் இருந்தாதான் குழந்தை முண்டுறதுக்கு, கை கால அசைக்கிறதுக்கு வசதியா இருக்கும். அப்டி போதுமான அளவு தண்ணி சத்து இல்லைனா குழந்தைக்கு ஆபத்துதான், உங்களுக்கு இன்னும் டெலிவரிக்கு ஒரு வாரம் இருக்கு, தண்ணி சத்து ஏறுதான்னு பார்ப்போம் இல்லைனா ஆபரேசன் பண்ணிடுறதுதான் நல்லது."
மீண்டும் மீண்டும் ஆபரேசன் என்று சொல்ல சொல்ல அம்முவிற்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. "தண்ணி சத்து ஏறுறதுக்கு வாய்ப்பிருக்கா டாக்டர்?"
"நிறையா தண்ணி குடிங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, தண்ணி சத்து ஏறுறதுக்கு கண்டிப்பா வாய்ப்பிருக்கு. குழந்தை முண்டுதான்னு மட்டும் அடிக்கடி check பண்ணிக்குங்க" இதைக் கேட்டதும் ஓரளவிற்கு நிம்மதியடைந்தனர்.
"நர்ஸ், இந்த பேஷன்ட்டுக்கு அட்மிஸன் போட்டு இப்ப நைட்டுக்கு ஒரு bottle போட்டு விடுங்க"
அட்மிஸன் ரூமுக்கு சென்றனர். அங்கு இடப்பக்கம் ஏழும், வலப்பக்கம் ஏழுமாக 14 படுக்கைகள் இருந்தன. அம்மு இடப்பக்கம் நான்காவதாக காலியாக இருந்த bed-ல் ஏறி படுத்துக்கொண்டாள். அம்முவின் bed-க்கு நேர் எதிராக இருந்த bed-ல் தான் செல்வி இருந்தாள். அப்போதுதான் செல்வி அம்முவை முதன் முதலாக பார்த்தாள்.சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து அம்முவின் கையில் நரம்பு தேடி அதில் ஊசி ஏற்றி மருந்து bottle-லை அருகிலிருந்த stand-ல் தொங்கவிட்டு விட்டு சென்றார். மருந்து சொட்டு சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. அருண் அம்முவின் அருகிலேயே bed-ல் அமர்ந்திருந்தான். அரைமணி நேரத்தில் மருந்து முழுவதும் இறங்கி bottle முடியும் கட்டத்திற்கு வந்தது.
"bottle முடிய போகுது, போய் நர்ஸ் யாரையாவது கூட்டிட்டு வாங்க" எதிர் bed-ல் இருந்து செல்வி அறிவுறுத்தினாள். அருண் நர்ஸ் அறைக்குச் சென்று ஒரு நர்ஸிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்தான். "வரேன் போங்க" என்று மெத்தனமாக கூறி அனுப்பிவிட்டாள். அருண் திரும்பி வந்து அமர்ந்து bottle-லை பார்த்துக்கொண்டிருந்தான். மருந்து இன்னும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தது.
"மருந்து ஓடி முடிஞ்சுட்டுனா இரத்தம் சரசரன்னு பாட்டிலுக்கு ஏறிடும் அத stop பண்ணி வச்சுட்டு மறுபடியும் போய் சொல்லி கூட்டிட்டு வாங்க"
"இத எப்டி நிப்பாட்றதுன்னு தெரியலக்கா" அம்மு விழித்தாள்.
"அதுல வெள்ள ட்யூப்ல சின்ன சக்கரம் இருக்கு பாரு, அத மேல ஃபுள்ளா ஏத்தி விடு,நின்னுடும்"
அருண் எப்படி செய்வதென்று தெரியாமல் அதை தடவிக்கொண்டிருக்க, கண் இமைக்கும் நேரகத்தில் சரசரவென்று இரத்தம் பாட்டிலுக்குள் ஏறியது. சுற்றியிருந்த எல்லோரும் பதறிபோய்விட்டனர். செல்வி விருக்கென்று எழுந்து போய் சக்கரத்தை மேலே ஏற்றி அதை நிப்பாட்டி விட்டு "சீக்கிரம் போய் நர்ஸ கூட்டிட்டு வாங்க" என்றாள்.
"போங்க வரேன்னு சொன்னாங்கக்கா"
"அவங்க அப்டிதான் சொல்லுவாங்க, கையோட நின்னு கூட்டியாந்தாதான் வருவாங்க, போங்க" அருண் கையோடு நின்று கூட்டி வந்தான். அந்த நர்ஸ் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் வந்து கொஞ்ச நேரத்தில் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு சென்றார்.
"உங்க கூட யாரும் வரலயா?"
"இல்லக்கா, நாங்க ரெண்டு பேரும் அனாதை ஆஸ்ரமத்தில ஒன்னா படிச்சு வளர்ந்தோம், விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்"
"ஓ.. அப்டியா. சரி, நைட்டுக்கு ஆம்பளைங்கள இந்த ரூம்ல தங்க விடமாட்டாங்க, நீங்க எங்க படுத்துக்குவீங்க" அருணிடம் கேட்டாள். ஒன்றும் சொல்ல தெரியாமல் இருவருமே விழித்தார்கள்.
"உங்களுக்கு உள்ளூரா வெளியூரா?"
"உள்ளூர்தான்க்கா, வீடு கிட்டதான் இருக்கு"
"அப்டின்னா, நீங்க வீட்டுக்கு போயிட்டு காலைல வந்துடுங்களேன்"
அருண் அம்முவை பார்த்தான். "அம்முவ தனியா விட்டுட்டு எப்டி போறது?"
"அதான் இங்க இத்தன பேரு இருக்கோம்ல, நான் பார்த்துக்குறேன்."
"நீ வீட்டுக்கு போயிட்டு வா அருண்,நான் பார்த்து இருந்துக்குறேன்" அருண் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு கிளம்பினான். "சரி, இடையில ஏதாவதுன்னா ஃபோன் பன்னு, நான் காலைல வரேன்"
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் அருண் கிளம்பி ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டான். "அதற்குள்ளாக அம்மு, செல்வி இருவரும் டாக்டர் அறையை நோக்கி வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.அருணைப் பார்த்ததும் அம்மு அவனிடம் பேசச் சென்றாள்.
"எதுக்கு எல்லாரும் வரிசைல நிக்கிறீங்க?"
"வயிறு பாக்குறதுக்கு"
"அப்டின்னா?"
"குழந்தை எப்டி இருக்குன்னு சின்ன டி.வி. ஸ்கேன்ல டெய்லி காலைல பார்ப்பாங்களாம்"
"சரி போய் வரிசையில நின்னுக்கோ"
செக் அப் முடிந்து வெளியே வந்தாள். "என்ன சொன்னாங்க?"
"குழந்தை நல்லாதான் இருக்காம், நெறயா தண்ணீ குடிக்க சொன்னாங்க" "எத்தனை c.m இருக்காம்?" "அது இந்த சின்ன ஸ்கேன்ல தெரியாதாம், மாடியில நேத்தி நைட் எடுத்தோம்ல அந்த பெரிய ஸ்கேன்லதான் தெரியுமாம், 2,3 நாள்க்கு ஒரு தடவதான் பெரிய ஸ்கேன் எடுப்பாங்களாம்"
"இப்போதைக்கு ஆபரேக்ஷன் பன்ன மாட்டாங்கன்னு நினைக்கிறேன், நீ நெறயா தண்ணி குடிச்சுக்கிட்டே இரு" காலை சாப்பாட்டோடு தண்ணி சத்துக்காக எழநீரையும் வாங்கிகொடுத்தான்.
"ஆபிசுக்கு லீவு சொல்லிட்டியா?"
"இல்ல, இன்னைக்கு நேர்ல போய்தான் லீவு எழுதிக் குடுத்துட்டு வரனும்"
"10, 15 நாள் எழுதிக்குடுத்துட்டு வந்துரு, என் கூடவே இரு, எங்கயும் போவாத" அருண் ஆபிசுக்கு கிளம்பிப் போனதும், செல்வி அம்முவின் அருகே வந்து உட்கார்ந்தாள்.
"உங்களுக்கு என்னைக்குக்கா date சொல்லிருக்காங்க?"
"எனக்கு date முடிஞ்சு ரெண்டு நாளாயிடுச்சு, எனக்கு இப்ப நல்லா பால் வேற சுரக்க ஆரம்பிச்சுட்டு"
"date முடிஞ்சுட்டாலே கரெக்டா பால் சுரக்க ஆரம்பிச்சுடுமாக்கா?"
"சில பேருக்கு 8 மாசத்துலயே கூட பால் சுரக்க ஆரம்பிச்சுடும்"
"அப்புடியா, உங்களுக்கு என்னதான்க்கா சொல்றாங்க?"
"தண்ணி சத்து அதிகமா இருக்காம், அது குறையுறதுக்காக பாட்டில் போடுறாங்க, 4,5 நாள் ஆகும் போல. தண்ணி சத்துக் குறையுதான்னு பார்ப்பாங்க இல்லன்னா ஆபரேஷன்தான்"
"அய்யோ, ஆபரேஷன்னு சொல்லாதீங்கக்கா அத கேட்டாலே பயமா இருக்கு. உங்களுக்கு ஆபரேஷன்னா பயம் கிடையாதா? உங்களுக்கு இது எத்தனாவது பிரசவம்க்கா?"
"கல்யாணம் ஆகி ஏழு வருஷமா எனக்கு குழந்தையே இல்ல, இப்பதான் கருத்தச்சிருக்கு, அதுலயும் தண்ணிசத்து பிரச்சனை வந்துடுச்சு"
"ஏழு வருஷமா குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும்ல?"
"கஷ்டமா, அத ஏன் கேக்குற, என் மாமியாரு என்ன டைவர்ஸ் பண்ணிட்டு அவருக்கு இன்னோரு கல்யாணம் பன்றதுக்கே தயாராயிட்டாங்க"
"அச்சச்சோ, என்னக்கா சொல்றீங்க?"
"உண்மையாதான் அம்மு சொல்றேன், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் மாமியாரு, இவளுக்கு புள்ள பாக்கியம் இல்ல அதனால இவள வெட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கன்னு என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிட்டாங்க, என் வீட்டுக்காரங்க ஒத்துக்கல, அப்புறம் எங்க அம்மா, ஊர்ல உள்ள பெரிய மனுஷங்களாம் கூடி இன்னும் கொஞ்சம் காலம் பொறுமையா இருப்போம்னு சொல்லி என் மாமியார அமைதிபடுத்துனாங்க.அதனாலதான் குழந்தை நல்ல படியா பொறக்கனுமேன்னு ரொம்ப பயமா இருக்கு" இருவரும் சொந்த அக்கா தங்கை போலவே மனம் விட்டு பேசி பழகினர்.
அந்த நேரம் இரண்டு நர்ஸ் பாட்டில் போடுவதற்காக பெயர் படித்தனர். "சரோஜா, பாக்கியம்.." பெயர் படிக்கப் பட்டவர்கள் கை தூக்க இரண்டு நர்ஸ்களும் ஆளுக்கொரு இடமாய் போய் பாட்டில் போட்டு விட்டு சென்றனர். துரதிஷ்டவசமாக இரண்டு செல்வியின் பெயரும் அப்போது கூப்பிடப்படவில்லை. இரண்டு நாட்கள் ஓடியது. ஆனாலும், அம்முவின் நிஜப்பெயர் செல்வி என்பதையோ, அக்கா அக்கா என்றே கூப்பிட்டுப் பழகியதால் அவளின் பெயர் செல்வி என்ற விஷயத்தையோ ஒருவருக்கொருவர் அறிந்திருக்கவில்லை. அருண் 15 நாட்கள் லீவு எழுதிக்கொடுத்துவிட்டு அம்முவுடனேயே இருந்து வந்தான்.ஒரே ரூமுக்குள்ளேயே இருந்து வந்ததால் பல நேரங்களில் அந்த ரூமில் இருந்தவர்கள் வெளி வராண்டாவில காற்றாட பொழுதைக் கழித்தனர். அதன் விளைவாக பெயர் கூப்பிடப்பட்ட நேரங்களில், ஒரே ரூமில் இரண்டு செல்வி இருந்து வந்ததை இரண்டு செல்வியும் கவனிக்கவில்லை, bottle போட வந்த நர்ஸ்களும் கவனிக்கவில்லை. இருந்தும் நான்கு நாட்கள் வரை எந்த பிரச்சனையும் முளைக்கவில்லை.
நான்காம் நாள் மதியம் செல்வியின் மாமியாரிடமிருந்து போன் வந்தது. கணேஷ்தான் பேசினான். "ஊர்ல அம்மாவ மாடு முட்டிருச்சாம் முதுகுல பலமான அடியாம், நடக்க கூட முடியலயாம், நான் உடனே கிளம்புறேன் செல்வி"
செல்வியின் அம்மா இடைமறித்தாள். "நீங்க இருங்க மாப்ள, நான் அங்க போறேன், பொம்பளையாளு கூட இருந்தா, குளிக்க கொள்ள, கொல்லைக்கு போக வர கூட மாட ஒத்தாசையா இருக்கும்"
"அம்மா சொல்றதுதாங்க சரி, நீங்க போய் என்ன பண்ண போறீங்க, அம்மா போகட்டும் நீங்க இங்க இருங்க" செல்வியின் அம்மாவை இருவரும் வழியனுப்ப சென்றுவிட்டனர். செல்வி தன் அம்மாவை வழியனுப்ப சென்று திரும்பி வருவதற்குள் அம்முவிற்கு ஒரு பாட்டில் ஓடி முடிந்திருந்தது. அந்த bottle முடிந்ததும், நர்ஸ் வந்து அம்முவை மாடியில் உள்ள ஸ்கேனுக்கு அழைத்துச்சென்றாள். அருணும் உடன் சென்றான். அம்மு ஸ்கேன் பார்க்க மாடிக்கு சென்ற நேரத்தில் செல்விக்கு ஒரு bottle போட வந்தார்கள். அம்மு ஸ்கேன் பார்த்ததில் தண்ணி சத்து 7 செ.மீ க்கு உயர்ந்திருந்தது. யாருமே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அது. மாறி ஏறிய மருந்து bottle இன்னும் செயல்புரிய தொடங்கவில்லை என்பது தெரியாமல் அம்மு ஆனந்தத்தில் மிதந்தாள். அம்முவிற்கு சுக பிரசவம் ஆவதற்கு நிறைய வாய்ப்பிருப்பாதாக டாக்டர் சொன்னார். அம்மு அதீத சந்தோஷத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தாள். விஷயம் கேட்டு செல்வி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. செல்விக்கு அப்போது பாதி bottle ஓடி முடிந்திருந்தது.
அப்போது இன்னொரு நர்ஸ் வந்து "யாரும்மா செல்வி, மாடியில போய் ஸ்கேன் பார்த்துட்டு வாங்க" என்று சொல்ல "இப்பதான் பார்த்துட்டு வந்தேன்" என்று அம்மு பதிலளிக்க, செல்வி சிரித்துக்கொண்டே "செல்வின்னு எம்பேர சொல்றாங்கடி" என்று சொல்ல "என்னக்கா சொல்ற உன் பேரும் செல்வியா" என்று அம்மு ஆச்சர்யமாய் கேட்டதை செல்வி அதிர்ச்சியாய் பார்த்தாள்.
"பாட்டில் போடுறதுக்கு செல்வின்னு கூப்டப்பலாம் நான்தான அம்மு கைதூக்குனேன்" இதை கேட்டு நின்ற நர்ஸ் உடனடியாய் விஷயத்தை டாக்டதெரிடம் சொன்னார். டாக்டர் இரண்டு செல்வியின் case historyயை எடுத்துக் கொண்டு அந்த ரூமுக்கு வருவதற்குள் அந்த ரூமில் ஒரே கூச்சலும், குழப்பமுமாய் ஆனது. டாக்டர் வந்து விபரங்களை விசாரித்ததில் கடைசியாக போட்ட ஒரு bottle மருந்து மட்டும் ஒருவருக்கொருவர் மாறி ஏறி விட்டது என தெரியவந்தது. தண்ணி சத்து குறைந்திருந்த அம்முவிற்கு தண்ணி சத்தை குறைக்கும் மருந்தும், ஏற்கனவே தண்ணி சத்து அதிகமிருந்த செல்விக்கு மேலும் அதை அதிகமாக்கும் மருந்தும் மாறி ஏறிவிட்டது.
அதற்குள் கூட்டத்திலிருந்து ஏதோ ஒரு குரல், "இதுக்குத்தான் ஆஸ்பத்திரியில பேர் குடுக்குறப்ப பொண்ணுங்க புருஷம் பேரை சேத்துக்கொடுக்கனும்ங்றது, அப்டி கொடுத்திருந்தா இந்த பிரச்சனை வந்துருக்குமா?" அதற்குள் மற்றொரு குரல் "ஆம்பளைங்களா இருந்தா?" என எதிர் கேள்வி கேட்டது. "அப்பா பேர சேத்து கொடுக்கட்டும். எந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க வந்தாலும் ஒரே பேர்ல ஒரு ரூம்ல ரெண்டு மூனு பேரு இருந்து மருந்த மாத்தி கொடுத்துட்டா உயிருக்கே பிரச்சனையா போயிடும்லயா?" "ஆமா, ஆமா இத இப்டியே விடக்கூடாது, ஆஸ்பத்திரி நடத்துறவங்களும் இதுல அக்கறை இல்லாம அலட்சியமா இருக்காங்க, இந்த செல்வி விஷயத்த பத்திரிக்கை, டி.வி-ன்னு கொண்டு போனாதான்யா இவங்களும் கவனமா இருப்பாங்க, அதோட மக்ககளும் தெரிஞ்சுப்பாங்க"
டாக்டர் குறுக்கிட்டு இத தயவு செஞ்சு பொசு படுத்தாதீங்க, முதல்ல இவங்க ரெண்டு பேரையும் பார்ப்போம். நர்ஸ் இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்கேன் பார்க்க உடனே ரெடி பன்னுங்க என ஸீரியஸாக குரலை மாற்றி கவனத்தைத் திருப்பினார். ஸ்கேன் எடுத்துப்பார்த்துவிட்டு உடனடியாக இருவரையும் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். இருவருக்கும் பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்டதால் செயற்கை வலி எடுக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இருவருக்குமே வலி எடுக்க ஆரம்பித்தது. இருந்தும் வலி போதுமான அளவிற்கு எடுக்காததாலும், செல்விக்கு தண்ணீர் சத்து ஒருபுறம் ஏறிக்கொண்டிருப்பதாலும் செல்விக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்வதென முடிவானது. அடுத்த ஒரு மணிநேர பெரும் போராட்டத்திற்குப் பிறது ஒரு குழந்தையின் அழுகை சத்தம் வெளியே கேட்டது. ஆறு மணி நேரத்திற்குப் பிறகு செல்வி மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தாள். தன் அருகே குழந்தை அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தது. அருகிலேயே கணேசனும், அருணும் கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்க ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது அடங்கி ஓய்ந்து போய்கிடந்தாள் அம்மு. செல்வி கண்விழித்ததை பார்த்ததும் அம்முவிற்கு துக்கம் வந்து தொண்டையை அடைத்தது. செல்வி அம்முவைப்பார்த்தாள். வயிறும் இல்லை, கையில் பிள்ளையும் இல்லை. ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை புரிந்துகொண்ட செல்வி கஷ்டப்பட்டு வார்த்தையைக் கோர்த்துக் கேட்டாள்,"அம்மு, உன் குழந்தை எங்க புள்ள?"
"அம்மு அதற்கு மேலும் அழுகையை அடக்க முடியாமல், குமுறி குமுறி, குழந்தை செத்துப்போச்சுக்கா" என்றாள். செல்வி துடிதுடித்துப் போனாள். செல்விக்கு கைகாலெல்லாம் நடுங்கியது, உடம்பே வெடவெடத்துப் போனது. இருவரும் ஒருவரையொருவர் கட்டி அழுதனர். அழுகை அடங்கவே பத்து நிமிடங்கள் ஆனது.அருணும், கணேசனும் கூட கண்ணீரை நிறுத்தியபாடில்லை.
செல்வி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தீர்க்கமாய் சொன்னாள் "நீ அழாத புள்ள, நீ என் குழந்தைய எடுத்துக்க புள்ள"
இதைக் கேட்டதும் அம்மு மேலும் உருகி கரைந்து விட்டாள். கணேசனுக்கும் கூட செல்வி இப்படி சொன்னது பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.
"அவசரத்துல இப்டி புரியாம பேசுறியேக்கா, உன் குழந்தைய நான் எடுத்துக்கிட்டா உன் மாமியாரு உன்ன வீட்டுக்குள்ள விடுவாங்களா? ஏழு வருஷம் கழிச்சுதான் உனக்கே குழந்தை பாக்கியம் கெடச்சிருக்கு, நீ குழந்தை இல்லாம போனா நீ அங்க குடும்பம் நடத்த முடியுமா?"
"நீ கஷ்டப்படுறத என்னால தாங்க முடியல புள்ள. வாங்கிக்க புள்ள"
"அதுக்கென்னக்கா பன்ன முடியும், அப்படியே நீ கொடுத்தாலும் அத நான் முழு மனசோட வாங்கிக்க முடியுமாக்கா, என்ன இருந்தாலும் தான் பெத்தெடுத்த குழந்தை மாதிரி ஒரு தாய்க்கு ஆகுமா?"
"நானும் நீயும் அப்டியா பழகிருக்கோம், நீயும் நானும் வேற வேறயா, என் வயித்துல பொறந்தா என்ன, உன் வயித்துல பொறந்தா என்னடி?"
"அந்த நம்பிக்கைலதான்க்கா என் குழந்தைய உனக்கு தார வார்த்து கொடுத்துருக்கேன்" அம்மு சொன்ன வார்த்தை செல்விக்கு தன் நடு மண்டையில் நங்கென்று சுத்தியலால் அடித்தது போல் இருந்தது. சுற்றிய தலையை சுயநினைவிற்கு கொண்டு வந்தாள்.
"என்ன புள்ள சொல்ற?"
"ஆமாக்கா, உன் குழந்தை வயித்துக்குள்ளயே செத்துப்போச்சுக்கா, ஆபரேஷன் பன்னி குழந்தைய எடுத்து போட்டாங்கக்கா,அழுகை நெஞ்சை முட்டுக்கொண்டு வந்தது, இத உன்கிட்டேருந்து மறைச்சுடலாம்னுதான்கா நெனச்சேன். இருபரு வருஷம் கழிச்சு ஒரு குழந்தைக்கு இவ தன்னோட அம்மா இல்லன்னு தெரிய வந்தாக்கூட அத அந்த குழந்தையால தாங்கிக்க முடியும்கா, ஆனா அதே இருபது வருஷம் கழிச்சு ஒரு அம்மாவுக்கு தான் பாலூட்டி வளர்த்த குழந்தை தன்னோடதில்லன்னு தெரிய வந்துச்சுன்னா அத
அவளால தாங்கிக்க முடியாதுக்கா, அதனாலதான்கா உன்கிட்ட இப்பவே உண்மைய சொல்லிட்டேன். இந்த குழந்தைய ஏத்துக்கக்கா," செல்வியின் கழுத்தை கட்டிக்கொண்டு கதறினாள்.
அவளால தாங்கிக்க முடியாதுக்கா, அதனாலதான்கா உன்கிட்ட இப்பவே உண்மைய சொல்லிட்டேன். இந்த குழந்தைய ஏத்துக்கக்கா," செல்வியின் கழுத்தை கட்டிக்கொண்டு கதறினாள்.
"எந்த பொண்ணுக்கும் உன் மனசு வராது புள்ள"
"உனக்கு வந்துச்சேக்கா, ஏழுவருசம் கழிச்சு பொறந்த குழந்தையா இருந்தாலும் பரவாலன்னு எனக்காக விட்டுக்கொடுக்க நெனச்சியேக்கா"
செல்வி அம்முவின் குழந்தையை மறுத்தாலும், மூவரும் பேசி செல்வியை சம்மதிக்க வைத்தனர். இந்த விஷயம் இவர்கள் நாலு பேரைத்தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாமென முடிவெடுத்தனர். இரண்டு நாட்கள் கழித்து டிஸ்ஜார்ஜ் ஆகி புறப்பட்டனர்.ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் வழியில் O.P சீட்டு வாங்கும் கவுன்டரை கடந்து வாசலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு இளைஞன் சீட்டு வாங்கிகொண்டிருந்தான். "மணி, வயசு 25"
"அப்பா பேரை சேத்து சொல்லுப்பா, ஒரே பேர்ல ரெண்டு மூனு பேரு இருக்குறதால மருந்து மாத்திரைய மாத்தி கொடுத்துப்புடுறாங்க" "மணி ராஜேந்திரன்" என்றான். இதை காதில் வாங்கிக்கொண்டே, "நாங்க பேர் கொடுக்குறப்பயே இப்டி கேட்ருக்க கூடதா" என நினைத்தவாறே இரண்டு செல்வி-களும் கடந்து சென்றனர்.
செல்வியையும், குழந்தையையும்,கணேசனையும் பஸ் ஏற்றி விட்டு அம்முவும் அருணும் சென்றனர். "அடிக்கடி ஃபோன் பன்னுக்கா" "நீயும் நேரம் கிடைக்கிறப்ப வீட்டுக்கு வந்துட்டுப்போ அம்மு"
நினைவலைகளை அறுக்கும் வகையில் வீளென்று கத்தியது குழந்தை."குழந்தை அழுவுது வந்து பால குடும்மா"
"கட்டிலிலிருந்து எழுந்து தன் மாமியாரிடமிருந்து குழந்தையை வாங்கி குழந்தைக்கு பால் கொடுத்து அமர்த்தினாள், செல்வி.
"கட்டிலிலிருந்து எழுந்து தன் மாமியாரிடமிருந்து குழந்தையை வாங்கி குழந்தைக்கு பால் கொடுத்து அமர்த்தினாள், செல்வி.