ராஜா தன் அறைக்குள் படுத்திருந்தான். அது அறை அல்ல, அந்தப் புலியின் குகை. உத்தரவின்றி யாரும் உள்ளே நுழைய மாட்டார்கள். கடித்துக் குதறி விடுமோ என்ற பயம்.
ராஜாவின் அம்மா அறையின் திரையை அவசியமான அளவு மட்டும் விலக்கிவிட்டுப் பதமாக கேட்டாள், "சாப்பாடு எடுத்து வைக்கவாப்பா?"
"ம்..." உள்ளேயிருந்து புலி உறுமியது.
சுத்தமான தரையாக இருந்தாலும்கூட, மகன் அமர்ந்து சாப்பிடுகிறானே என்பதால் அவனுக்கென்றே வாங்கி வைத்திருந்த தடுக்கு ஒன்றை விரிப்பாள். அமர்வான். சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் உட்கார்ந்த இடத்திலேயே கை கழுவிக்கொள்ள செம்பில் தண்ணீரும், பாத்திரமும் வைப்பாள். கழுவிக்கொள்வான். அவன் அம்மா பாதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பரிமாறுவாள். அறுசுவையில் ஒருசுவை குறைந்தாலும் அவள் அதோடு தொலைந்தாள். எப்படியோ, ஆண்டவன் புண்ணியத்தில் அன்று பிழைத்தாள். ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்தாலே, சாப்பாடு நன்றாக இருக்கிறது என பாராட்டுவதாக அவன் அகராதியில் அர்த்தம்.
அந்தத் தாய் அவனைப் பெற்றவள் மட்டுமல்ல; அவனையேக் கற்றவள். அந்தத் தாய்க்கு அந்த அகராதியின் அகராதி புரியும்.
ராஜாவின் அப்பா அவனிடம் அரவே பேச மாட்டார். ஏதாவது அவன் விஷயத்தில் தலையிட்டுக் கேட்டால், வெடுக்கென ஏதாவது பேசி விடுவான். சுய வேலை, சுய சம்பாத்தியம். அதனால் தன் தந்தையின் தயவில் தான் இல்லை என்ற தான்தோன்றித்தனம். எப்போது அவனுக்குத் தன் வாழ்கையைத் தானே பார்த்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் வந்ததோ, அப்போதிலிருந்தே அவனது மியாவ் உறுமலாக மாறிவிட்டது.
அவனை நெஞ்சில் தூக்கி நடையோ நடவென நடந்தவர் முன், நெஞ்சைத் தூக்கி நடந்து காட்டுகிறான். மரியாதையைக் காப்பாற்றிகொள்ள மனுஷன் மண்ணைப் பார்த்து நடந்து போகிறார்.
அந்த வீட்டின் வராண்டா குறுகலானது. அவன் வரும்போது எதிரே அப்பாவோ, அம்மாவோ வந்து விட்டால், அவனுக்கு வழிவிட்டு
சுவரோரம் ஒதுங்கிக் கொள்வார்கள். சொல்லப்போனால், ஒடுங்கிக்கொள்வார்கள்.
வீட்டுச் செலவிற்கும்கூட பணம் தராத இவனுக்காக இவ்வளவையும் ஏன்தான் தாங்கி கொள்கிறார்கள் என்றால், அந்த இரு மனதும் ஒரு மனதாக நினைப்பது ஒன்றைத்தான்: 'எங்க புள்ளை நல்லா இருந்தான்னா அது போதும்'.
ராஜாவின் சித்தப்பா பத்திரிக்கை வைப்பதற்காக அன்று வந்திருந்தார். அவரை வரவேற்று முடித்து சிறிது நேரம் கழித்து தன் மகனை அழைத்தாள்.
"சித்தப்பா வந்திருக்காங்க ராஜா."
"வாங்க" என்றான் பேருக்கு. அவனுக்கு சொந்த பந்தம் மீதெல்லாம் ஒரு பற்று இல்லை.
"அக்காளுக்குக் கல்யாணம் வச்சுருக்கு ராஜா, ரெண்டு நாளுக்கு முன்னாடியே எல்லோரும் வந்திருங்கப்பா."
"ம்.." என்றான்.
"ம்-மா? என்னடா 'ம்'ங்ற? சின்ன புள்ளைல அப்புடி பேசுவ, இப்பலாம் என்ன பெரிய மனுஷனாகிட்டியா?" சிரித்துக் கொண்டே விளையாட்டாக கேட்டார்.
"அப்டிலாம் இல்ல"
"நல்லா முகம் கொடுத்து பேசமாட்றானே அண்ணி, என்ன இப்டி இருக்கான்?"
"அவன் அப்டிதான், யார்கிட்டயும் அவ்வளவா பேச மாட்டான்."
"அம்மா அப்பாவ நல்லா பார்துக்குறியாடா?"
"ம்.. பார்த்துக்குறேன்."
"என்னத்த பார்த்துக்குற? அம்மா கண் ஆபரேஷன் பண்ணிக்கணும்னு சொன்னதுக்கு இப்ப பணம் இல்லன்னு சொல்லிட்டியாம்ல. ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாங்கப்பா. நீதான் நல்லா சம்பாரிக்கிறியே அம்மா அப்பாவ நல்லா பார்துக்கடா ராஜா" என்று சொன்னதும் அவனுக்கு உஷ்ணம் தலைக்கு ஏற ஆரம்பித்துவிட்டது. இப்படிதான் ஊர் முழுக்க சொல்லி தனக்கு கெட்டப் பேர் வாங்கி தருகிறாயா என்பது போல் அம்மாவை முறைத்தான்.
அம்மா குறுக்கிட்டு சொன்னாள், "அத விடு, அவன் செலவ பார்த்துகிறதுக்கே அவனுக்கு சரியாப் போகுது"
" வீட்டு செலவுக்குலாம் காசு கொடுப்பியாடா?"
"அதெல்லாம் கொடுப்பான்" அம்மாக்காரி முந்திக்கொண்டாள்.
அவனை விசாரணைக் கைதி போல் நிற்க வைத்து கேள்விக் கணைகளைத் தொடுக்க பொறுமை இழந்து விட்டான். "ஏன் பொய் சொல்றீங்க? அதெல்லாம் நான் ஒன்னும் கொடுக்கிறதில்ல. அவங்க செலவை அவங்கதான் பார்த்துகிறாங்க."
"என்ன ராஜா, இப்டி பேசுற! உன்ன அவங்க எவ்வளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க, கொஞ்சம்கூட நன்றியே இல்லாம பேசுறீயேடா?"
"படிக்க வச்சாங்களா? பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனாங்கனு வேணும்னா சொல்லுங்க. நான் படிச்சுகிட்டேன். எல்லார் வீட்லயும்தான் புள்ளைய பள்ளிக்கூடம் அனுப்புறாங்க, எல்லாம் படிச்சு வந்துடுதா? எத்தன தறுதலையா போகுது? நான் நல்லா படிச்சேன், இன்னைக்கு நல்லா வேலைல இருக்கேன். அவங்கபோய் என்ன படிக்க வச்சாங்கன்னு சொல்றீங்க. என்ன படிக்க வச்சுட்டதா யாரும் பெருமைபட்டுக்க வேணாம்." படபடவென பொறிந்து தள்ளிவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.
"என்னண்ண உன் மயன் இப்டி பேசிட்டு போறான்?"
"அவன் அப்டிதாண்டா, நீ எதையும் மனசுல வச்சுக்காத"
"இவன் எப்பவும் இப்டிதானா? நீங்க ரெண்டு பேரும் எப்டி இவனோட காலம் தள்ளுறீங்க?"
"ராஜா அப்பா அவனோட ஒரு வார்த்தைகூட பேசுறது கிடையாது, சாப்பாடு வேணும்னா நான் எடுத்து வைப்பேன். சாப்பிடுவான். மத்தபடி நானும் அவ்வளவா அவன எதுவும் கேட்டுக்கமாட்டேன். அவன்பாட்ல வருவான் போவான். அவ்வளோதான். அவனோட ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுறப்ப மட்டும்தான் சிரிச்சே பேசுவான்."
"பொம்பள புள்ளைங்க பரவால போலயே, ஆம்பள பசங்க அட்டூழியம் பண்றானுங்க. நான்லாம் ஏதோ புண்ணியம் பண்ணிருக்கேன் போல. சரி, நான் புறப்படுறேன், கல்யாணத்துக்கு நல்லா படியா வந்து சேருங்க."
ராஜா மதிய சாப்பாட்டிற்கு வீடு திரும்பவில்லை. இரவு சாப்பாட்டு நேரத்திற்கு உள்ளே நுழைந்தான்.
"சாப்பாடு எடுத்து வைக்கவாப்பா?"
"ம்..."
சத்தம் போடாமல்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அதற்கு மேல் அவனுக்கு இருக்க முடியவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஆரம்பித்தான்.
"அந்த ஆள்கிட்ட சொல்லி கண் ஆபரேஷன்கு காசு கேட்க வைக்கிறீங்களா?"
"நான் ஏதோ சாதரணமா பேசிக்கிட்டிருக்கும்போது அன்னைக்கு ஒரு நாள் அப்டி சொன்னேன்பா, அதப்போய் சித்தப்பா ஞாபகத்துல வச்சுக்கிட்டு கேட்டுருச்சு போல"
"ஆபரேஷன் செலவு அது இதுன்னு என் தலைல கட்டனும்ங்றத அடியோட மறந்துடுங்க. என் செலவுக்கே எனக்கு சரியா இருக்கு. எத்தனை பேரு கழுதை வயசானப்புறமும் பெத்தவங்க காசுல உட்காந்து தின்னுக்கிட்டுருக்கானுங்க தெரியுமா? நான் உங்களுக்கு அப்டிலாம் கஷ்டத்த குடுக்குறேனா? கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். இந்த வயசுலேயே என் செலவெல்லாம் நானே பார்த்துக்கிறேன் அதுக்கே நீங்க என்னை நெனச்சு பெருமைபடனும்."
அந்த தாய் தாங்கும் வேதனை தெரியாதவன், 'நீங்க என்னை நெனச்சு பெருமைபடனும்' என்று
அவன் சொன்னதும் தன்னிலை மறந்து லேசாக சிரித்துக்கொண்டே "சரிப்பா" என்றாள்.
அந்தச் சிரிப்பைக் கேட்ட ராஜாவுக்கோ அவள் 'சரிப்பா' என்று உண்மையாக ஒப்புக்கொள்ளாமல் 'பெருமைபடனுமா?' என்று கேலியாக சிரிப்பதாக பட்டது. அந்த கேலிச்சிரிப்பு
அவனைக் கேவலமாகத் தாக்க, எடுத்தெறிந்தான் சாப்பாட்டுத் தட்டை.
தட்டின் விளிம்பு அவன் அம்மாவின் கண்களில் போய் அடிக்க, பொறிகலங்கி அப்படியே பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். அப்பா பதறிப்போய் ஓடிவந்தார்.
"என்னை என்ன கேவலப்படுத்தி பார்க்குறீங்களா? என்னமோ நக்கலா சிரிக்குறீங்க? இனி இந்த வீட்ல ஒரு நிமிஷம் இருக்கமாட்டேன்" என்று காட்டுக் கத்தாகக் கத்திவிட்டு வீட்டை விட்டுப் புறப்படப் போனான். அவன் அப்பா அவனை மல்லுக்கட்டி மறித்து நிறுத்தினார். "போயிடாதப்பா ராஜா, நாங்க பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போயிரும்பா."
"உங்களுக்கு மரியாதை அவளோதான், ஒழுங்கா நகந்துருங்க."
அவன் தந்தையின் கண்களில் கண்ணீர் பெருகிநிற்க, அவனோடு மல்லுக்கட்டினார். அம்மாவோ எழக்கூட முடியாமல் அழுதுகொண்டு கிடந்தாள். அவனோ அமைதியாகவில்லை.
சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டு ஆறுமுகம் ஓடி வந்து ராஜாவைத் தடுத்துப் பிடித்தார். ராஜாவுக்கு ஆறுமுகம் மீது ஒரு மரியாதை உண்டு. ஆறுமுகம் படித்தவர் என்பதைக்காட்டிலும், பண்பானவர்; பண்பானவர் என்பதைக்காட்டிலும் பக்குவமானவர். ஆறுமுகம் வந்து பக்குவமாக பேசியதில் ஓரளவு அமைதியாகி உள்ளே சென்றான்.
ஆறுமுகம் கையோடு ராஜாவின் அம்மா அப்பாவைத் தன் வீட்டிற்கு அழைத்துப்போய் நடந்ததை விசாரித்தார். பிறகு பக்குவமாக ஆரம்பித்தார்.
"ஆம்பளபசங்க வாழ்க்கையில இது ஒரு கட்டம். இந்த வயசுல இப்டிதான் இருப்பாங்க. கொஞ்ச காலத்துல தானவே சரியாகுற பிரச்சனைதான் இது. அவன் முறைச்சுகுட்டு நின்னா, நீங்களும் விறைச்சுகிட்டு நிக்காதீங்க. முடிஞ்ச அளவு அவன்கிட்ட ப்ரெண்ட்லியா பேசப்பாருங்க.”
"எங்க சார் பேசுறது? எங்களப் பார்த்தாலே அவனுக்குப் பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுவுறான். அவன்மேல எவ்வளவு அக்கறையா இருக்கோம், அத அவன் புரிஞ்சுக்கவே மாட்றான், சார்"
"நீங்க அக்கறைனு நினைக்கிறதெல்லாம் அவனுக்கு அனாவசியத் தொந்திரவா படும். மீசை வளரணும்னு ஆசைப் படுற வயசுலபோய் அவன் முகத்துல மஞ்சளைத் தேச்சா பார்த்துகிட்டு சும்மா இருப்பானா? அவன் புரிஞ்சுக்கலன்னு சொல்லாதீங்க நீங்கதான் புரிஞ்சுக்கல. அவன் உங்கள நல்லாத்தான் புரிஞ்சு வச்சுருக்கான். நீங்க அவன்கிட்ட பேசுனா குடும்ப கடனையும், சொந்தக்காரன் கதையையும் பேசுவீங்க, இல்லன்னா அவன் எதிர்காலத்துக்கு நீங்களே திட்டம்போட்டு அட்வைஸ் பண்ண நெனப்பீங்க. இதெல்லாம் நல்லா தெரிஞ்சு வச்சுருக்கதாலதான் உங்கள பக்கத்துலையே நெருங்க விட மாட்றான். இந்த வயசுல ப்ரெண்ட்ஸ், சினிமான்னு சுத்துறதுக்குதான் பிடிக்கும். அவன் வந்து உங்ககிட்ட ஒரு பொம்பளப் புள்ளையப் பத்தி பேசுனான்னா உட்காந்து கேப்பீங்களா? அதெல்லாம் அவன் ப்ரெண்ட்ஸ்கிட்டதான் பேச முடியும். பருவ வயசுலபோய் பக்குவம் வரணும்னு எதிர்பார்க்கக்கூடாது. அதுக்குன்னு ஒரு நேரம் வரும். அப்ப நீங்களே ஊர் சுத்த சொன்னாக்கூட சுத்தமாட்டான். தானாவே பொறுப்பு வந்துடும்.அவன்போக்குல விடுங்க அவன."
"அவன் வீணாப் போயிடக்கூடாதே சார்."
"வீணாப் போயிடுவானா? ரெண்டு வயசு குழந்தை காணாப்போயிடுமேன்னு கவலைப்பட்டா அது நியாயம், இருபது வயசுக்கு மேல ஒரு ஆம்பளைப் புள்ள வீணாப்போயிடுமேன்னு கவலைப்பட்டா என்னங்க நியாயம்? அவனா அப்புறம் வாழ்க்கைய எப்பதான் கத்துக்குறது?"
"நாம பக்கத்துல இருந்து பார்த்து வளர்க்கனுமேன்னுதான் மனசுக்கெடந்து பதறுது, வேற ஒண்ணுமில்ல சார்"
"அடைகாத்து வளர்க்குறதுக்கு அவன் என்ன கோழிக்குஞ்சா? ஆம்பளபுள்ளங்க. அவன் வாழ்கையைப் பார்த்துக்க அவனுக்குத் தெரியும். யாருக்கும் வாழ்க்கைய சொல்லிக்கொடுத்தெல்லாம் வரவச்சுட முடியாது. நிம்மதியா போய்ட்டு வாங்க. உங்க புள்ள ஒன்னும் வாழ்க்கையில தொலைஞ்சுப்போயிட மாட்டான்."
"சரிங்க சார், நாங்க வர்றோம்"
முதல் நாள் நடந்த சம்பவம் ராஜாவை சித்திரவதை செய்துகொண்டிருந்தது. அப்பா அம்மாவுடன் அதற்கு மேலும் இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. மறுநாளே ஒரு முடிவு கட்டினான். தன் காதலி சுபாவை நேரில் சந்தித்தான்.
"நாம கல்யாணம் பண்ணிக்கலாம், சுபா"
"என்னடா, இப்டி
திடீர்னு சொல்ற?"
"எங்க வீட்ல சண்டை, எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல. நீதான் எப்ப கூப்ட்டாலும் வந்துடுறேன்னு சொன்னீல, இப்ப என்ன யோசிக்கிற? எனக்குதான் வேலை இருக்குல, அப்புறம் என்ன? நான் உன்ன சந்தோஷமா பார்த்துக்கிறேன்"
"யோசிக்கலடா, திடீர்னு கேட்டதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. சரி, எப்ப கல்யாணம்?"
"நாளைக்கே"
"நாளைக்கேவா!"
"ஏன் இப்டி ஷாக் ஆகுற? என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிட்டேன். ரெஜிஸ்டர் ஆபீஸ் வேலையெல்லாம் அவங்க பாத்துப்பாங்க. நீ இன்னைக்கு நைட் எட்டு மணிக்கு பஸ் ஸ்டாண்ட்க்கு வந்துடு. மத்தத நாங்க பார்த்துக்குறோம்"
"ஏன்டா இவ்வளோ அவசரப்படுற? கொஞ்ச நாள் போகட்டுமே"
"இனிமே அந்த வீட்ல என்னால இருக்க முடியாது. வான்னா வா. அவ்வளோதான்."
"சரி" என்று தலையசைத்துவிட்டு சென்றுவிட்டாள் சுபா.
இரவு ஏழு மணிக்கு சுபாவிற்கு போன் செய்தான்.
"கிளம்பிட்டியா? சரியா எட்டு மணிக்கு வந்துடு. லேட் பண்ணிடாத."
"இங்க வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு ராஜா. கொஞ்ச நாள் முன்னாடி எங்கிட்ட ஒரு மாப்ள போட்டோ காட்டி சம்மதம் கேட்டாங்க. நான் உன்னப் பத்தி சொன்னேன். வீட்ல ஒத்துக்கல. ஓடி போறதுன்னா போ, ஆனா நான் கண்டிப்பா தூக்குல தொங்கிடுவேன்னு அப்பா பயமுறுத்துனாரு. நான் அப்டிலாம் எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிப் பிரச்சனைய ஆறப்போடுருக்கேன்."
"இது என்ன புதுசா கதை சொல்ற? இத ஏன் காலைலயே சொல்லல?"
"அதனாலதான் கொஞ்சம் டைம் கேட்டேன். அதுக்குள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு நெனச்சேன். ஒரே ஒரு மாசம் டைம் குடு, என்னால சம்மதிக்க வைக்க முடியலன்னா அப்புறம் கண்டிப்பா வந்துடுறேன்."
வேறு வழி இல்லாமல் அவனும் அரைமனதாக சரி என்றான். ஆனால் அதன் பிறகு சில நாட்களாகவே ராஜா போன் செய்தால் சுபா எடுக்கவேயில்லை. ஒரு தகவலுமில்லை. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதே சிந்தனையாக பித்துப் பிடித்தவன் போலிருந்தான்.
ராஜாவிடம் ஏதோ பயங்கரமான மாற்றம் இருப்பதை கண்டாலும், ஆறுமுகம் சொன்னதை நம்பி அவன் அம்மா எதுவுமே கேட்கவில்லை.
ராஜா தன் நண்பர்களுடன் சாலையில் ஒரு நாள் போய்க்கொண்டிருக்கும்போது, சுபா ஒரு பைக்கின் அருகே மரத்தடியில் நிற்பதை பார்த்துவிட்டான்.
"சுபா" பின்புறம் இருந்து அழைத்தான்.
திரும்பியவள் திடுக்கிட்டுப் போனாள்.
"எங்க அப்பா அந்த கடைக்குப் போயிருக்காரு, அவரு திரும்பி வரதுக்குள்ள சீக்கிரம் போயிடு."
"என்ன பேசுற நீ? ஒரு போன் பண்ணா கூட எடுக்க மாட்ற, என்னதான் நெனச்சுக்கிட்டுருக்க?
இதற்கு மேலும் அவனை சமாளிக்க முடியுமென சுபாவிற்குத் தோன்றவில்லை.
"எங்க வீட்ல பார்த்த மாப்பிள்ளைய முடிவு பண்ணிட்டாங்க, என்னால ஒன்னும் பண்ண முடியல, எங்க அப்பா தற்கொலை பண்ணிப்பேன்ங்றாரு "
"நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்"
"வேணாம், நீ போயிடு" என்றாள் சுபா.
சுபா ஏதோ மழுப்புகிறாள் என்று சந்தேகித்தான் ராஜா.
"என்ன சுபா, போயிடு போயிடுங்ற. நாம எப்டிலாம் பழகிருக்கோம், நான் உனக்காக என்னவெல்லாம் செஞ்சுருக்கேன். இப்டி விரட்டுற?"
"எனக்காக செலவு பண்ணத சொல்றியா? அதுக்குதான் என்னோட சேர்ந்து ஜாலியா ஊர் சுத்துனீல, அப்புறம் என்ன? அதுக்கே எல்லாம் சரியா போச்சு"
சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது ராஜாவுக்கு.
"அடச்சீ, ஜாலியா உன் கூட ஊர் சுத்துறதுகுதான் உனக்கு செலவு பண்ணேனா? எப்டி உன்னால இப்டி கூசாம பேச முடியுது? என் அப்பா அம்மாவுக்குக் கூட ஒரு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தது கிடையாதுடி, உனக்கு எவ்வளோ ஆசை ஆசையா எடுப்பேன்னு தெரியுமா? உனக்கு எடுத்தப்பதாண்டி மொதமொதலா, ட்ரெஸ் அழகா இருக்கான்னு பார்த்துட்டு விலையைப் பார்த்தேன். என் பொண்டாட்டியா நெனச்சுதானடி உனக்கு செலவு பண்ணேன்."
"இங்க பாரு ராஜா. இந்த காலத்துல கல்யாணம் ஆகுற வரைக்கும் பசங்க செலவு பண்ணா பொண்ணுங்க நாங்களும் சேர்ந்து சுத்துவோம். இது எல்லா பசங்களுக்கும் தெரியும், எல்லா பொண்ணுங்களுக்கும் தெரியும். நானும் அப்டி நெனச்சுதான் பழகுனேன். நீதான் அடிக்கடி கல்யாணம் அது இதுன்னு ஆரம்பிச்சுடுவ. நீயா புரிஞ்சுப்பன்னு பார்த்தேன். நீ புரிஞ்சுக்குற மாதிரி தெரியல. நீ இவ்வளோ தூரம் வந்தப்புறம் என்னாலையும் உன் டார்ச்சர் தாங்க முடியல. அதான் சொல்லிட்டேன். எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். நாம இதோட முடிச்சுக்கலாம். அதான் ரெண்டு பேருக்குமே நல்லது.
"இனிமே என்னடி நல்லது, கெட்டது?" என்று ஒரே அறையாக அறைந்து விட்டான்.
சுபா கத்தித் தன் அப்பாவைக் கூப்பிட அங்கு ஒரே கூட்டமாக கூடி விட்டது. சுபாவின் அப்பா ராஜாவை அடிக்கப் போக ராஜாவின் உடன் வந்த நண்பர்கள் அவனை பிடித்து இழுத்தனர்.
"நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோலாம் என்கிட்டதாண்டி இருக்கு. நீ எப்டி இன்னொருத்தன கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கேன்னு பார்த்துடுறேண்டி" என்று நடு ரோட்டில் நின்று ராஜா கத்த, சுபாவின் தந்தை மகளை அழைத்துச் சென்று விட்டார்.
"நீ
தைரியமா வா சுபா, அவன்கிட்டேருந்து போட்டோவ எப்டி வாங்கனும்னு எனக்கு தெரியும்" என்று தந்தை ஆறுதல் சொல்ல புறப்பட்டுச் சென்று விட்டாள்.
ராஜாவின் நண்பர்களும் ராஜாவை இழுத்துச் சென்றுவிட்டனர்.
வீட்டிற்கு சென்றதும் தணியாத கோபத்துடன் தனியாக உட்கார்ந்திருந்தான் ராஜா. அவளை ஆளை வைத்தாவது எதாவது செய்ய வேண்டும்போல் இருந்தது அவனுக்கு.
கொஞ்ச நேரத்தில் ராஜாவைத் தேடி சில ஆட்கள் வந்தனர். வெளியே எட்டிப் பார்த்து, வந்தது யார் என்பதைப் புரிந்துகொண்டவன் தன் நண்பர்கள் சிலருக்கு போன் செய்தான்.
"மச்சான், சுபாவோட அப்பா அடியாளுங்கள அனுப்பிருக்கான்டா, உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்கடா" என்றான்.
ஒவ்வொருவரும் “வீணா பிரச்சனை பண்ணாதடா, எங்களையும் இனிமே இது மாதிரி பிரச்சனைலலாம் இழுத்துவிடாதடா" என்பது போல் சொல்லி நழுவிக் கொண்டனர். ராஜா வீட்டை விட்டு வெளியே வந்தான்.
"சுபாவோட சேர்ந்து எடுத்த போட்டோ ஏதோ வெச்சுருக்கியாமே எங்கடா?" என்றான் வந்தவனில் ஒருவன்.
அந்த ஆட்கள் பேசும் தொனியிலிருந்தே ஏதோ பிரச்சனை என்பது அப்பா அம்மாவுக்குப் புரிந்தது.
"அதெல்லாம் கிழிச்சுப்போட்டுட்டேன், என்கிட்ட எதும் இல்ல"
"அடி வாங்கி சாகாத, கொடுத்துடு நாங்க பேசாம போயிடுவோம்."
"யாருங்க நீங்கலாம்? எங்க வீட்டுக்கு வந்து எங்க புள்ளையவே மிரட்றீங்க?" அம்மாக்காரி முன்வந்தாள்.
அவளைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு விட்டு ராஜாவை நோக்கி விரைந்தார்கள். தன் மனைவி கீழே விழுந்த போதும் கூட, தன் மகன் மீது ஏதும் தவறு இருக்குமோ என்ற அச்சத்தில், குறுக்கே வந்து முதலில் தன் மகனை விசாரித்தார், ராஜாவின் தந்தை. ராஜா நடந்ததை விரைவாக சொன்னான். ஆனால் விரிவாக சொல்ல முடியவில்லை. தன் மகன் என்ன நடந்தது என்று கடுகளவு சொன்னதை வைத்தே என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை கடலளவு கணித்துவிட்டார். அவர் அப்பா ஆயிற்றே! தன் மகனிடம் அந்த போட்டோவையெல்லாம் வந்தவர்களிடம் கொடுத்துவிடும்படி சொன்னார்.
"இல்ல, அவள பழி வாங்காம விடமாட்டேன்" என்று ராஜா சொன்னதுதான் தாமதம் வந்தவர்கள் வந்த வேலையை ஆரம்பித்துவிட்டர்கள்.
தன் மகன் மீதும் கை நீட்டிய பிறகு ராஜாவின் அப்பாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அடிதடி சண்டையாக மாற, ஆறுமுகம் ஓடிவர, ராஜாவின் அம்மா அக்கம் பக்கத்தில் சத்தம் கொடுக்க, அக்கம் பக்கத்திலிருந்து அனைவரும் ஓடிவர, வந்தவர்களை ஒருவழியாக்கிவிட்டனர். வந்தவர்களுக்கு அடிதான் கிடைத்ததே தவிர போட்டோ கிடைக்கவில்லை. ஓட்டமாக ஓடியே விட்டனர். கூட்டம் கலைந்து சென்றபின் ராஜா தன் அப்பாவையும், அம்மாவையும், ஆறுமுகம் சாரையும் பார்த்து தலைகுனிந்து நின்றான். பிறகு அவர்களும் கலைந்து சென்றுவிட்டனர்.
அன்றிரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை மூன்று மணியாகியும் கண் அசரவே இல்லை. தன் அம்மாவில் தலைமாட்டின் அருகே சென்று அமர்ந்தான். ஏதோ சத்தம் கேட்டதால் கண்விழித்தவள், தன் மகன் தேம்பித்தேம்பி அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்து மூச்சடைத்துப் போனாள்.
"என்ன ராஜா, அய்யய்யோ! என்னங்க நம்ம புள்ள அழுவுறாங்க" என்று அலறியதில் அப்பாவும் அலறி அடித்துக் கொண்டு எழுந்தார்.
"என்னடா ஆச்சு, ஏண்டா அழுவுற, என்னப்பா சொல்லுடா" என்றார் தந்தை.
"என் புள்ள இப்டி தேம்பித்தேம்பி அழுவுறானே, நான் என்ன பண்ணுவேன்!" என்று பதறுகிறாள் தாய்.
"அம்மா என்னை மன்னிச்சுருங்கம்மா...., நான் உங்களையும் அப்பாவையும் புரிஞ்சுக்கவே இல்லம்மா..." என்று காலைப் பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்துவிட்டான்.
"அழுவாதைய்யா, நீ சந்தோசமா இருந்தா எனக்கு அது போதும்ப்பா" என்று தன் மகனை கட்டிக் கொண்டு அழுதாள். "நீ ஆசையா ரெண்டு வார்த்தை பேசுனா எனக்கு அதுவே போதும்ப்பா" என்று ஆனந்தகண்ணீர் வடித்தது அந்த தாய் மனம்.
பேசுவதற்கே வார்த்தை ஏதும் இல்லாமல் நெடுநேரம் அழுது கொண்டிருந்தான். அவன் அப்பா அம்மாவுக்கு அவர்கள் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்தோடியது போல் இருந்தது.
காலையில் எழுந்த பின், ஆறுமுகம் வீட்டிற்கு சென்றான் ராஜா.
"சார், எங்க அப்பா அம்மாவ நான் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் சார். இப்பதான் சார் அவங்க அருமையே தெரியுது. அன்னைக்கு நீங்க மட்டும் என்னை தடுக்கலைன்னா வீட்டை விட்டு வெளியேபோய் வீணா போயிருப்பேன் சார். ரொம்ப நன்றி சார்."
"நன்றியெல்லாம் எதுக்கு ராஜா, நீ இப்டி பேசுறத கேக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு. உன்ன நெனச்சு உங்க அம்மா ரொம்ப வருத்தப்படுறான்கப்பா, அவங்க மனசு நோகாம இனிமேலாவது நடந்துக்க"
"கண்டிப்பா சார், எங்க அம்மா வயித்துல பொறந்தது என் பாக்கியம். வயித்துக்குள்ள இருந்த காலத்துலேருந்தே எங்க அம்மாவ நான் எட்டி உதச்சுகிட்டேதான் இருந்துருக்கேன், அப்பகூட அவங்க கவலையெல்லாம் என் பாதம் நோக கூடாதுங்கறதுலயேதான் இருக்கு. ரொம்பவே பாடா படுத்திட்டேன் சார்." என்று சொல்லும் போது அவன் கண்களில் நீர் பொங்க ஆரம்பித்துவிட்டது." எங்க அம்மா அப்பாலாம் இல்லன்னா நான் சந்தியில நிக்க வேண்டியதுதான் சார், என் வாழ்க்கை நாசமா போயிருக்க வேண்டியது சார், நல்ல வேலையாப் போச்சு."
"ஏன்ப்பா நாசம் அது இதுன்னு பேசுற? மொதல்ல கண்ணைத் துடை நீ"
"இல்ல சார், இப்பதான் தெளிஞ்சுருக்கு எனக்கு. ப்ரெண்ட்ஸ்னு நெனச்சவவன்லாம் கை விட்டுட்டுப் போயிட்டான். காதலின்னு நெனச்சவ கழட்டி விட்டுட்டுப் போயிட்டாள். சிரிச்சு சிரிச்சுப் பேசுன உறவெல்லாம் ச்சீ-ன்னுப் போயிட்டு சார் எனக்கு." என்றான் ஏமாற்றத்தின் வலியோடு.
"உங்க பையன் நல்லருப்பான்னு உங்க அப்பா அம்மாகிட்ட அன்னைக்குதான் சொல்லி அனுப்பி வச்சேன். நீ இவ்வளோ சீக்கிரம் மனசு மாறுனதுல ரொம்ப சந்தோஷம் ராஜா. உங்க அம்மா அப்பாவ நல்லாப் பார்த்துக்கப்பா."
"சார், மொதவேலையா எங்க அம்மாவுக்கு கண் ஆபரேஷன் பண்ணனும்னு ஆசைப்படுறேன் சார், அம்மாகிட்ட சொல்லிப்பார்த்தேன் அதெல்லாம் எதுக்கு வேணாம்ங்றாங்க, நீங்கதான் சார் ஒத்துக்க வைக்கணும்"
"சரி வா" என்று அவனுடன் வீட்டிற்கு சென்றார் ஆறுமுகம்.
"ஏன் ராஜா அம்மா, ஏன் கண் ஆபரேஷன் வேணாம்ங்றீங்கலாம்?"
"எதுக்கு சார் அதெல்லாம், என் புள்ள அப்டி சொன்னதே எனக்கு சந்தோஷம் சார்"
"அத
சொன்னதே உங்களுக்கு சந்தோஷம்தான், ஆனா அத செஞ்சாதான் அவனுக்கு சந்தொஷம்ங்றான். அவனாதான ஆசைப் பட்டு சொல்றான், ஏன் மறுக்குறீங்க?"
"சரி சார், அப்டினா அவனும் ஒன்னத்துக்கு ஒத்துக்கணும்"
"என்னம்மா? சொல்லுங்க." என்றான் ராஜா ஆசையோடு.
"அந்த போட்டோவைல்லாம் தூக்கி போட்டுரு ராஜா. அத வச்சுக்கிட்டுப் பழி வாங்க துடிக்காத, உனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது" என்றாள் அம்மா.
"ஆமாடா, அவதான் மோசம்னு தெரிஞ்சு போச்சுல்ல, அவ செஞ்சதுக்கு அவளே அனுபவிப்பாள். நீ அந்த விஷயத்தையே மறந்துடு ராஜா" என்றார் அப்பா.
ராஜா ஆறுமுகம் சாரைப் பார்த்தான்.
"அம்மா அப்பா உன் நல்லதுக்குதான் ராஜா சொல்றாங்க. நீ வாழ்க்கையில போக வேண்டியது இன்னும் ரொம்ப தூரம் இருக்கு. அற்ப விஷயத்துலலாம் மனச போக விடாத." என்றார் ஆறுமுகம்.
"சரி" என்று சந்தோஷமாக ஆமோதித்தான்.
ராஜாவின் அம்மாவிற்கும் கண் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. அவன் அம்மா நல்லபடியாக கண் விழித்தபோது அந்தத் தெய்வத்தின் கண்களில் முதன் முறையாக வாழ்வின் பொருள் கண்டுகொண்டான். ஏதோ ஒரு உறுப்படியான காரியத்தை செய்துவிட்டதாக அவனுக்குள் ஒரு ஆழமான நிம்மதி. அதுதான் வாழ்வின் பொருளோ?
***** உறுமல் அடங்கியது
*****