Friday, 19 October 2012

ஆச்சர்யம் ஆனால் உண்மை


சுகமான காலை
சூடான காபி
சுடச்சுட செய்தி.
செந்தில் செய்தித்தாளை அங்குமிங்குமாக மேம்போக்காக மேய்ந்தான்.
மத்திய மந்திரி மீது ஊழல் குற்றச்சாட்டு
“கொள்ளையடிக்குறதுக்குன்னே அரசியலுக்கு வருவானுங்க போல” தனக்குத்தானே பேசிக்கொண்டு தலைப்புச்செய்திகளை மட்டும் வாசித்து வந்தான்
கல்வியில் புதிய சீர்திருத்தம்
“இப்பதான்டா இந்த நாட்டுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு”
பட்ட பகலில் பணம்,நகை கொள்ளை
“இன்னைக்குமா? எங்க பார்த்தாலும் இதேதான்”
இளம்பெண் கதற கதற கற்பழிப்பு - கண்ணீர் வாக்குமூலம்
“............”
விவசாயிகள் வாழ்வு மேம்பட நலத்திட்டங்கள் அறிவிப்பு
“எந்த விவசாயிக்கு எல்லாம் முழுசா போய் சேருது, நடுவுல உள்ளவனே பாதிய சுருட்டிடுறான்”
லாரி மோதி இருவர் பலி
“குடிச்சுட்டு ஓட்டிருப்பான் கம்னேட்டி, சும்மா நடந்து போறவனயே மோதிப்புடுறாங்ஞ, ரோட்ல போறதுக்கே பயமாருக்கு”
கள்ளச்சாராயம் காய்ச்சியதால் பத்து பேர் கைது - போலீசார் அதிரடி சோதனை
“அப்டிப்போடு, இன்னும் கொஞ்ச நாள்ல இதெல்லாம் சுத்தமா ஒழிச்சுக் கட்டிருவாங்க போலயே”
விலைவாசி உயர்வை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம்
“வெலவாசிலாம் இப்ப கடுமையா இருக்கு, போற போக்க பாத்தா குடும்பபே நடத்த முடியாது போல”
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்
“எவளோ கொடுத்தாலும் பத்தாதுடா உங்களுக்கு”
ஈழத்தின் மீது இலங்கை ராணுவத்தின் வெறிச்செயல்
“பாக்கவே பயங்கரமா இருக்கு,பாவம். உள்நாட்டுக் கலவரம்ங்றதனால ஐ.நா. தலையிடக்கூடாதோ? கவர்மென்டும் கண்டுக்கவே மாட்டுதே!”
தீவிரவாதிகளின் வேண்டுகோளுக்கு அரசு இணங்கியது
“யாரு யார கண்ட்ரோல் பண்றான்னே புரியலயே”
சொத்து தகராறில் சொந்த அண்ணனை வெட்டிக் கொலை
“இப்பலாம் சொத்துக்கு ஆசைபட்டு திங்கிற சோத்துலயே வெஷம் வச்சு புடுறாங்ஞ, யாரயுமே நம்ப முடியமாட்டுது”
“என்னங்க” மனைவி அழைத்தாள்.
“என்னடி, எப்ப பாரு, பேப்பர் படிக்கிறப்பதான் நொய் நொய்ம்ப, ஒரு அஞ்சு நிமிஷம் ஹெட்லைன்ஸ் பாக்க விடுறியாடி?”
“ஏங்க, நான் ஸெகென்ட் ஸ்டேன்டர்டு படிக்கிறப்ப 1330 திருக்குறளயும் ஒப்பிச்சது போட்டோவோட பேப்பர்ல வந்துச்சுல”
“ஆமா”
“அத பக்கத்து வீட்ல புதுசா குடி வந்துருக்க வனஜாகிட்ட காட்றதுக்காக இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேப்பர பீரோலேர்ந்து எடுத்து டேபிள்ல வச்சிருந்தேன், அதுக்குள்ள காணம். நீங்க பார்த்தீங்களா?”
அப்போதுதான் தன் கையிலிருந்த செய்தித்தாளின் தேதியைப் பார்த்தான்
23.08.1983
அப்படியே அந்த ஆறாவது பக்கத்தையும் பார்த்தான்.
ஒரு மூலையில் அந்த குட்டிச்செய்தி இருந்தது
பள்ளிச் சிறுமி சாதனை
“இதப் படிக்காம போயிட்டமே”

Tuesday, 9 October 2012

ஒருநாள் கூத்து

அந்த குட்டி மீனுக்கு ஆயுள் கெட்டிதான். அரை மயக்கத்திலிருந்த அந்த மீனை, மீன் வளர்ப்பதற்காக வெட்டி வைத்திருந்த சிறிய குட்டையில் விட்டு உயிரூட்டி அழகு பார்த்தான் சதீஷ். அவன் சென்றதும் அந்த குட்டையில் ஏற்கனவே வாழ்ந்து வந்த மூன்று மீன்களும், ஒரு தவளையும், ஒரு நண்டும் இந்த புதிய வரவை விசாரிப்பதற்காக அதனருகே கூடின. புதிய வரவை காண்பதில் அவர்களுக்கு ஏக சந்தோஷம்.
“உன் பேரென்ன”
“ரஃபி”
“நான் சென்னல், இது கெலுத்தி, இது வெளவால், அது தவளை அண்ணா, அது நண்டு.  எங்களலெல்லாம் பார்த்து பயப்படாத, நாங்க உனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம்”
“ஏன் எதுமே பேச மாட்ற, உம்முன்னே இருக்க” கெலுத்தி கேட்டது
“புது இடம்ல, ஆரம்பத்துல எல்லாருக்கும் அப்டிதான் இருக்கும். போக போகதான் சரியாகும், நீ கூடதான் இங்க வந்த புதுசுல ஊம கொட்டான் மாதிரி இருந்த, இப்ப என்ன போடு போடுற” நண்டு  நகைச்சுவையாக சொன்னது
“நான் எப்டி இங்க வந்தேன்” அந்த சின்ன நகைச்சுவையைக் கூட ரசிக்கும் நிலையில் இல்லாத ரஃபி ஸீரியசாக கேட்டது.
“அதோ அக்காவும், தம்பியும் கதை அடிக்கிற சத்தம் கேக்குதே, அந்த சதீஷ்தான் உன்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போனான்” வெளவா மீன் சொன்னது
“எப்டிக்கா உயிரோட இருக்குற மீன வாங்கிட்டு வந்த, நான் உயிர் மீன் கிடைக்காதுன்னு நெனச்சேன்”
“நானும் அப்டிதான்டா நெனச்சுப் போனேன், ஆனா இன்னைக்கு மீன் மார்க்கெட்ல கூட்டமே இல்ல, அதனால ஒவ்வொரு கடையா பார்த்துட்டு வந்தேனா, ஒரே ஒரு கடையில மட்டும் உயிரோட மீன் இருந்துச்சு. அந்த கடையிலேயே வீட்டுக்கு மீன் வாங்கிகிட்டு, இந்த குட்டி உயிர் மீன ஃப்ரியா வாங்கிட்டு வந்துட்டேன்”
“தேங்ஸ்க்கா”
“இப்பதான் எனக்கே புரியுது, நான் மீன் மார்கெட்ல மயங்கி விழுந்ததுக்கப்புறம் இதான் நடந்துருக்கா, பொழுது போறதுக்குள்ள என் நீனா கூட எப்டி மறுபடி சேரப் போறேன்”
“நீனா யாரு” நண்டு கேட்டது
“என்னோட உடல், பொருள், ஆவி எல்லாமே அவதான்”
“மீன் மார்கெட்டுக்கு எப்டி வந்த”
“நாங்க கடல்லதான் வாழ்றோம். வழக்கம் போல இன்னைக்கு காலையில இரை தேடிப் புறப்புட்டப்ப.....”
“நீனா நான் இரை தேட போயிட்டு வரேன், பாத்து சூதானமா இருந்துக்கோ”
“இன்னைக்கு நானும் உங்க கூட வரட்டுமா”
“வேணான்டா செல்லம், இரை தேடி போறப்ப உயிருக்கே கூட ஆபத்து வரலாம் .தூண்டில், வலையிலலாம் சிக்காம அவங்க போடுற இரைய நேக்கா எடுத்துட்டு வரனும்.உனக்கு அதெல்லாம் தெரியாது. அதெல்லாம் ரிஸ்க், நான்னா எப்டியும் சமாளிச்சுருவேன். நீ பத்திரமா இங்கயே இரு. நான் போயிட்டு வரேன்”
“சரி..., பாத்து போயிட்டு வாங்க”
“ஆனா இன்னைக்கு காலையில கொஞ்சம் அசால்ட்டா இருந்ததால, வலையில சிக்கிட்டேன். எல்லாரோடயும் சேர்த்து என்னையும் பிடிச்சு கொண்டு வந்துட்டாங்க. மார்க்கெட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல தண்ணீ இல்லாததுனால மயக்கம் வந்துடுச்சு, முழுச்சுப் பாத்தா இங்க இருக்கேன்”
”அப்டினா நீ சாய்ங்காலம் திரும்பி வருவன்னு அங்க நீனா நெனச்சுக்கிட்டுருக்காங்களா”
“ஆமா, நான் கண்டிப்பா திரும்பி போயே ஆகனும், என்ன விட்டா அவளுக்கு வேற யாருமே கிடையாது, அது என்ன மட்டுமே நம்பி வாழுற ஒரு ஜீவன்”
“புரியாம பேசாத, நீ மறுபடி உயிர் பொழச்சதே பெரிய அதிசயம். கடல் இங்கேருந்து எங்க இருக்குன்னு, இங்கயே வாழ்ற எங்களுக்கே தெரியாது. நீ வேற இந்த இடத்துக்கு புதுசு, எங்கனு கண்டுபிடிச்சு போவ”
“நீனாவ அங்க விட்டுட்டு என்னால வேற எங்கயுமே வாழ முடியாது, எனக்கு இது மறுபிறவி கிடைச்ச மாதிரி. நீனாவுக்காகதான் என் உயிர் என்ன   விட்டு போகலன்னு நெனக்கிறேன், கண்டிப்பா நீனாவ மறுபடியும் பார்ப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”
ரஃபியின் நெஞ்சில் இருந்த உறுதி அவர்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது.
“நீனா பாவம்தான், உன்னையே நம்பிக்கிட்டுருப்பா. ஆனா நீ இப்ப எங்க இருக்குறன்னே உனக்குத் தெரியாதப்ப எப்டி போவ. கடல்னு ஒன்ன நாங்கலாம் பார்த்ததே இல்ல. எங்களுக்கும் வழி தெரியாது” தவளை தன் வருத்தத்தை வெளிப்படுத்தியது.
ஆறும் அமைதியாக இருந்தன.
சென்னல் நியாபகப் படுத்திப் பார்த்ததுவிட்டு, “ஏய் நண்டு, நீ அடிக்கடி இந்த வீட்டுக்குப் பின்னால ஒரு வாய்க்கால் ஓடுதுன்னு சொல்வீல, அந்த வாய்க்கால் கடலுக்குதான போவும்?”
“நான் இங்க வரதுக்கு முன்னாடி அந்த வாய்க்கால்ல இருந்தது என்னவோ வாஸ்தவம்தான், ஆனா அது எங்க போய் முடியும்னுலாம் எனக்குத் தெரியாது”
ரஃபிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல் சொன்னது,“பரவால்ல, நான் அந்த வாய்க்காலுக்குப் போறேன். அதுக்கப்புறம் என்னங்குறத அப்புறம் பார்க்கலாம், ஏன்னா எப்டியும் இங்க இருந்து ஒன்னும் ஆகப் போறதில்ல”
“நீ அங்க எப்டி போவ, உன்னால தண்ணியில மட்டும்தான போவ முடியும்” கெலுத்தி கேட்டது
“கேள்வி மட்டும் கேட்கத் தெரிஞ்சு வச்சுக்க, உறுப்படியா ஏதாவது யோசனை சொல்றியா?” வெளவா மீன் கெலுத்தியிடம் கடுப்படித்தது
“ஒரு ஐடியா! ரஃபி, நீ தவள அண்ணா மேல ஏறிக்கோ, தவள அண்ணா ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி உன்ன போய் வாய்க்கால்ல விடட்டும், கொஞ்ச நேரம் கஷ்டமாத்தான் இருக்கும், தாக்கு பிடிச்சுக்கோ”
ரஃபி சந்தோஷமாக சரி என்றது.
“சரி என் மேல ஏறிக்க, கெட்டியா பிடிச்சுக்கோ”
மெதுவாக தவளை குட்டையிலிருந்து வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தது. குட்டையின் அருகில் பூனை ஒன்று வசமாக உட்கார்ந்திருந்தது. ஏறிய தவளை அப்படியே மெதுவாக குட்டைக்குள் இறங்கி விட்டது.
“ஏன் என்னாச்சு?”
“குட்டைக்கு வெளியில பூனை உட்காந்திருக்கு, இப்ப போனா மீனை கவ்விடும்”
பூனையும் அந்த இடத்தை விட்டு நகர்வதாய் தெரியவில்லை. ரஃபியின் மனம் கிடந்து தவியாய் தவித்தது.
“இப்ப நான் எப்டி போறது?”
“ஆரம்பமே சரியில்லையே, இவன் மறுபடி நீனாவ பார்ப்பானா?” கெலுத்தி கேட்டது.
“உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?” வெளவா மீன் கடுப்போடு கெலுத்தியை முறைத்தது
“என்ன எதுக்கு முறைக்கிற? பூனை உட்காந்திருக்கே, எப்டி தாண்டி போக முடியும்? அதான் கேட்டேன்”
“உங்க சண்டைய நிப்பாட்டுங்க மொதல்ல”  சென்னல் பஞ்சாயத்துப் பண்ணியது.
சற்று நேரம்மெளனம் நிலவியது.
“பூனைக்கிட்டேருந்து தப்பிக்க நான் ஒரு வழி சொல்லட்டுமா?” யாரும் எதிர்பாராத வண்ணம் கெலுத்தியிடமிருந்து ஒரு யோசனை வந்தது.
“எதாவது உறுப்புடாத பேச்சு பேசுனீனா நான் வெறியாயிடுவேன் சொல்லிட்டேன்”
“ஏய் வெளவா, எப்ப பார்த்தாலும் அவன திட்டிக்கிட்டே இருக்காத. நீ சொல்லு கெலுத்தி” நண்டு வக்காலத்து வாங்கியது.
“இன்னைக்கு மீன் மார்க்கெட் போய் மீன் வாங்கிட்டு வந்திருக்காங்கன்னா என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“மீன் குழம்பு வைக்கப் போறாங்கன்னுதான அர்த்தம்”
“பார்த்தியா, இதுக்குதான் இந்த லூசு பயல பேச வேணாம்னு சொன்னேன்” வெளவா மீனுக்கு கடுப்பு ஏறியது.
“சொல்றதா முழுசா கேட்டுட்டுப் பேசனும். மீன் குழம்பு வச்சதும் அந்த வாசத்துக்கு இந்த பூனை கண்டிப்பா வீட்டுக்குள்ள போகும். அந்த கேப்ல தவளை அண்ணாவோட ரஃபி தப்பிச்சுப் போகட்டும், எப்டி?”
“ஏதோ உன் மண்டையிலயும் மசாலா இருக்குன்னு நிருபீச்சுட்ட” வெளவா மீனே கெலுத்தியை பாராட்டி விட்டது.
அதே போல் நடந்தது, பூனை நகர்ந்தது.
தவளை மேல் ரஃபி ஏறியது, தவளை குட்டைக்கு மேல் ஏறியது.
ரஃபி ஒருமுறை குட்டைக்குள் இருந்த தன் புதிய நண்பர்களை பிரிவதை எண்ணி கவலையுற்றுப் பார்த்தது.
“நீயும் நீனாவும் கண்டிப்பா சேருவீங்க, நம்பிக்கையோட சந்தோஷமா போயிட்டு வா” நான்கும் வாழ்த்துச் சொல்லி அனுப்பியது.
“போயிட்டு வரேன் நண்டு, வரேன் சென்னல், வரேன் கெலுத்தி, வரேன் வெளவா”
முதுகிலிருந்து கீழே விழாதபடி தவளை தன் ஒரு முன்னங்கையால் ரஃபியை அணைத்துப் பிடித்துக்கொண்டே  தாவித்தாவி வாய்க்காலை அடைந்தது. ரஃபி தவளை முதுகிலிருந்து வாய்க்காலில் இறங்கியது.
“இந்த உதவிய நான் எப்பவும் மறக்க மாட்டேன் அண்ணா” கடைசி நேரத்தில் ரஃபிக்கு கண் கலங்கி விட்டது.
“பார்த்து போயிட்டு வா ரஃபி”
வாய்க்காலின் ஓட்டத்தில் வேகமாக நீந்தியது. ஆனால் வாய்க்கால் வந்து சேர்ந்த இடமோ கடல் அல்ல, குளம்.
“குட்டையிலிருந்து குளத்துக்குதான் வந்திருக்கோமா? அப்பவே நண்டு சந்தேகத்திலதான் சொன்னுச்சு.சந்தேகம் சரியாப் போச்சு. இப்ப என்ன பன்றது?”
“என்ன திருதிருன்னு முழிக்கிற? யார் நீ? உன்ன இங்க நான் பார்த்ததே இல்லயே” குளத்து மீன் விசாரனை நடத்தியது.
“என் பேரு ரஃபி, நான் கடலுக்குப் போகனும். வழி தவறி வந்துட்டேன், வழி சொல்றீங்களா?”
“கடலா, அதெல்லாம் எனக்குத் தெரியாது” முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட பேச்சு கொடுத்தது தப்பா போச்சே, எதுக்குடா வம்புன்னு நழுவியது.
குளக்கரையில் வந்து உட்கார்ந்தது ஒரு மீன்கொத்தி. எங்கிருந்தோ பறந்து வந்து உட்கார்ந்ததைப் பார்த்து இதற்கு தெரிந்திருக்கக் கூடும் என்ற கணிப்பில் கேட்டது, “நான் கடலுக்குப் போகனும் வழி சொல்றீங்களா”
“வந்து உட்கார்ந்ததுமே வரவு வருதே” என்று நினைத்துக்கொண்டு ரஃபியைத் தின்ன  திட்டம் தீட்டியது.
“கடல் இங்கேருந்து எட்டி இருக்கே, எப்டி போவ?”
தவளை மேல் சவாரி செய்தது போலவே செய்யலாம் என்ற நினைப்பில், “நான் உங்க மேல ஏறிக்கவா, என்ன தயவு செஞ்சு கொண்டுபோய் விட்டுறீங்களா?”
“மேல ஏற வேணாம். உச்சி வெயில் ரொம்ப கொளுத்துது, நீ என்னோட வாய்க்குள்ள ஒட்காந்துக்கயேன்”
“சரி”
மீன்கொத்தி வாயை திறந்தது.
இதையெல்லாம் அந்த குளத்து மீன் பரிதாபமாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அதற்கு மனசு கேட்கவில்லை.
“வாய்க்குள்ள போயிடாத... அது உன்ன சாப்பிட பாக்குது”
சத்தம் கேட்டதும் விறுக்கென்று பின் வாங்கி குளத்துக்குள் ஓடி வந்து விட்டது  ரஃபி.
“கடைசி நேரத்துல கதைய கெடுத்துருச்சே” அந்த குளத்து மீன் மீது மீன்கொத்தி கங்கனம் கட்டிக்கொண்டது.
“என்ன  ரஃபி இவளோ அப்பாவியா இருக்க, அது உன்ன சாப்பிட திட்டம் போடுதுன்னு கூட உனக்குத் தெரியலயா?”
“உண்மையாவே உதவி பண்றதுக்குதான் வாய்க்குள்ள கூப்பிடுதுன்னு நெனச்சேன், நல்ல வேள காப்பாத்திட்ட”
“சரி விடு, நீ கடலுக்குப் போறதுக்கு நான் ஒரு வழி சொல்றேன், இங்க பக்கத்துல ஒரு காடு இருக்கு, அத தாண்டி அந்த பக்கம் போயிட்டா அந்தாண்ட பக்கம் கடல்தான்”
“நான் எப்டி காட்ட தாண்டி போறது”
“காட்டுக்கு அந்த பக்கம் வீட்லேயிருந்து பொலங்குறதுக்கு தண்ணி எடுக்குறதுக்காக இங்க சாய்ங்காலம் ஒருத்தர் ரெண்டு பேர் நிச்சயம் வருவாங்க, அவங்க தண்ணி எடுக்க கொடத்த முக்குறப்ப கொடத்துக்குள்ள போயிடு. ஆனா அதுக்கப்புறம் நீ எப்டி கடலுக்குள்ள போறங்குறது உன் சாமார்த்தியம். சரியா?”
“என்ன பன்றதுன்னே தெரியாம இருந்த எனக்கு, இப்ப கடல்கிட்ட போற வரைக்கும் வழி காட்டுனியே அதுவே போதும்”
“இங்க வா, இந்த படித்துறை பக்கத்துலயே நின்னுக்கோ. குடத்த விடுறப்ப கரெக்டா போயிடு. போயிடுவியா?”
“ம், போயிடுவேன்”
“சரி, நான் போயிட்டு வரேன்”
குளத்து மீன் சொன்னது போலவே சாய்ங்காலம் ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்த போது தயாராகிக் கொண்டது  ரஃபி. குடத்தை முக்கிய போது லாவகமாக அதனுள் சென்று விட்டது.
நடந்ததையெல்லாம் மீன் கொத்தி மறைந்திருந்து கவனித்துக் கொண்டு இருந்தது.
குடத்தைத்த தூக்கிக் கொண்டு காட்டு வழியே நடந்து போனாள். மீன் கொத்தியும் வெகு தூரம் வரை அவளை பின் தொடர்ந்து பறந்து சென்றது. இன்னும் கொஞ்சம் தூரம்தான் கடக்க வேண்டியிருந்தது.அந்த பயங்கரம் அப்போதுதான் நடந்தது.
“மீன் கொத்தி அவளுக்குத் தெரியாமல் அலேக்காக அந்த குடத்திலிருந்து மீனைக் கொத்திச் செல்ல குடத்தின் மேல் அமர்ந்தது”
அந்த காட்டில் ஏதோ அலறல் சத்தம் கேட்டு மீன் கொத்தி அதிர்ந்து போனது.அவளும் அறண்டு போனாள். அது அலறல் சத்தம் இல்லை, பிளிறல் சத்தம்.
மதம் பிடித்த காட்டு யானை ஒன்று அவளின் எதிரே கொஞ்சம் தூரத்தில் தாறுமாறாக ஓடி வந்து கொண்டிருந்தது. அவள் குடத்தை அப்படியே போட்டு விட்டு அறண்டு ஓடி விட்டாள். மின்னல் வேகத்தில் மீன்கொத்தி காணாமலே போய் விட்டது. குடம் விழுந்து தெறித்ததில், குடம் ஒரு பக்கம் கிடக்க; மீன் ஒரு பக்கம் சிதறி விழுந்து கிடந்தது. நல்ல வேளை காட்டில் மண், பொது பொதுவென்று பொதி மண்ணாக இருந்ததால் மீனுக்கு உடலில் அவ்வளவாக அடிபடிவில்லை. உயிரோடுதான் இருந்தது.
மீன் கிடக்கும் இடத்தை நோக்கிதான், அந்த யானையின் கால்கள் கடும் வேகத்தில் வந்து கொண்டிருந்தன. தன்னை நோக்கி நெருங்கி வருவதைப் பார்த்து ரஃபிக்கு ஈரக்குலை நடுங்கியது. யானையின் முன்னங்கால்களிலிருந்து தப்பித்த ரஃபி , வலது பின்னங்கால் தன்னை முழுவதும் மூட வந்ததை அதற்கு மேல் பார்க்கத் துணிவில்லாமல் கண்களை இறுக்கி மூடிக் கொண்டது. நூலிழையில் உயிர் தப்பித்தது. தறி கெட்டு ஓடிய ஓட்டத்தில், யானையின் கால்தடம் பதிந்த இடத்தில் அரையடி ஆழத்திற்கு ஒரு குழியே விழுந்து விட்டது. நூலிழையில் தப்பித்து அந்த குழியின் விளிம்பின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மீன் அடுத்த வினாடி அந்த குழிக்குள்ளேயே விழுந்து விட்டது. ஐந்து நிமிடம் கழித்துதான் கண் திறந்தது.கண் திறந்து பார்த்தால் இறுதிச்சடங்கிற்காக சவக்குழியில் கிடப்பதைப் போலவே இருந்தது ரஃபிக்கு. 
“இனிமேல் யார் வந்து காப்பாற்றுவது?” சற்று நேரத்தில் தண்ணீர் இல்லாததால் வெறும் மண்ணில் தத்தளித்தது. “
இவ்வளவு தூரம் வந்தது இப்படி அனாதையாக சாகத்தானா” என்று நினைத்த மாத்திரத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சடசட வென ஒரு சத்தம். மழை ச்சோன்னு பெய்தது. குழியில் தண்ணீர் நிரம்பியது. தத்தளித்த மீன் தண்ணீரில் தன்னைக் கிடத்தியது. உயிர் எப்படியோ ஒட்டிக் கொண்டது. மழை நின்றது.
“ இந்த குழியிலிருந்து மீதி கொஞ்ச தூரத்தை எப்படி கடப்பது? இன்னும் கொஞ்சம் நேரம் போனால் இந்த குழியிலுள்ள நீரும் வற்றி காய்ந்து போகுமே” என கவலையுற்றது.
“இந்த இடத்தில் எந்தவொரு தவளை அண்ணாவோ வரப்போவதில்லை. இந்த குழியிலிருந்து கடலுக்கு நேராக வாய்க்காலுமில்லை. எவர் ஒருவரும் இந்த குழியில் குடத்தை முக்கி தண்ணீர் தூக்கப் போவதுமில்லை. இங்கிருந்து என்னை அலேக்காக தூக்கிச்செல்ல அந்த ஆண்டவனும் வரப்போவதில்லை. இனி என்ன செய்வது, நீனா உன்ன இனிமே பார்க்கவே முடியாதா, இதுதான் நம் விதியா?”
காலையிலிருந்து இதுவரை நடந்ததையெல்லாம் கண்முன்னே ஓடவிட்டது. “யாராரோ உதவி பண்ணுனாங்களே, என்னென்னமோ நடந்துச்சே, அதெல்லாம் இப்டி வந்து முடியத்தானா”
கண்கள் மூடி கவலையில் கருகியது.
அதனாலேயே நம்ப முடியாத அளவிற்கு அந்த அபார சிந்தனை பொறி தட்டியது.
“நாம இப்ப யானையோட கால் தடம் பதிஞ்ச குழியில உள்ள தண்ணியிலதான இருக்கோம், அப்டின்னா யானை நெடுக ஓடி வந்தப்ப அதோட கால்தடம் பதிஞ்ச எல்லா இடமும் குழியாதான இருக்கனும், அந்த எல்லா குழியிலயும் மழை பேஞ்ச தண்ணி தேங்கிதான நிக்கும், இங்கேருந்து கடல் வரைக்கும்தான் என்னால தரையில போக முடியாது, பக்கத்துக் குழி வரைக்கும் கூடவா போக முடியாது?”
“நீனா இதோ வந்துட்டேன்” சீறிப் புறப்பட்டுவிட்டது ரஃபி
தான் இருந்த குழியிலிருந்து வெளியே தாவி விழுந்தது. தரையில் தத்தளித்துக் கொண்டே அடுத்தக் குழியில் விழுந்தது. இப்படியே ஒவ்வொரு குழியாய் தாவியது. இடையிடையே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறியது. அதோ கடல் அதன் கண்ணில் பட்டுவிட்டது. தான் பழக்கப்பட்ட இடத்திற்கு வந்தாகிவிட்டது. யானையின் கால்தடம் வெகுதூரம் வரை இருந்தது. அப்படியே முன்னேறி வந்து கொண்டே இருந்தது.
இதோ இந்த ஓடை இருக்கிறதே. இதுல விழுந்து இனி ஈஸியா போயிடலாமே. ஒரு குழியில் இருந்து ஓடையில் தாவியது. அதற்குள் பொழுதும் சாய்ந்து விட்டது.
நேரே கடலுக்குள் நுழைந்தது. அப்பாடா நீனாவையும் பார்த்து விட்டது. நெடு நேரமாகியும் ரஃபியைக் காணாமல் நீனா அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.
“நீனா.....”
“ரஃபி... ஏன் இன்னைக்கு இவளோ லேட்? பயந்தே போயிட்டேன் தெரியுமா, அப்டி எங்கதான் போனீங்க?”
“சொல்றேன் வா...”

Sunday, 23 September 2012

நீலக்கடலும் நிலாவும்

உலக உருண்டை வெறும் உடல் - இந்த
உடலுக்கு உயிர் கொடுத்தது கடல்.
கடல்தான் இக்கதையின் கதாநாயகன். தன் வளங்களை வாரி வழங்குவதில் கடல் ஒரு கர்ணன்.கர்ணனோடு ஒட்டிப்பிறந்த கவச குண்டலத்தைப் போல் கடலின் நெஞ்சோடு ஒட்டிப் பிறந்திருந்தாள் ஒருத்தி. பல பெயர் கொண்ட இவளின் பெயர்களில் பலருக்கும் பரிச்சையமான பெயர் நிலா. இவள்தான் இந்த காதல் கதையின் கதாநாயகி.
அன்றொரு இரவில் அந்த காதலர்களுக்கு வாய்த்த சூழல் இலக்கியமானது. ஆழ்கடலின் அடியில் ஆள்அரவமற்ற அமைதி, வெட்கத்தின் வேலிபோடும் வேலையை மிச்சப்படுத்தும் இருட்டு, இரவு நேரத்திற்கு இனிமை சேர்க்கும் விதமாக கடலின் இரைச்சல் பின்னனி இசை. இருட்டுக்கு வெளிச்சமாய் வெண்ணிலவின் முகம் பிரகாசித்தது. கடலின் மடியில், நிலா மயக்கத்தில். இருட்டில் இருந்தும் அதுவும் இவ்வளவு இருக்கத்தில் இருந்தும் பால்நிலவுடன் தேன்நிலவு கொண்டாட முடியாமல் தவித்தான். காரணம், காதலன் இன்னும் கணவனாகவில்லை. இந்த எல்லைக்கோடு கண்டிப்பான காதலியின் கட்டளையா? இல்லை, கணவனான பிறகுதான் கரையைக் கடப்பது என்ற கடலின் கண்ணியமா? இரண்டுமேதான் எனும்படி நேர்த்தியான காதல் இது.

“நிலா”
“ம்..”
“எதாவது பேசேன்”
“ம்ஹூம்”
“ஏன் எதாவது கோவமா”
“ஆமா, உங்கள கடல்னு கூப்பிடுறதுக்கு நல்லால்ல வேற ஒரு நல்ல பேரா வைங்கனு எத்தன தடவ சொல்றேன் வச்சீங்களா”
“ஓ.. அதான் கோவமா. சரி இப்பவே ஒரு பேர் வச்சிடலாம்”

கொஞ்சும் நேரத்தில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசித்து ஒரு பெயர் சொன்னான்.
நான் நீலநிறமாக இருப்பதால் நீலக்கண்ணன் என்று கூப்பிடேன்
“கண்ணனா, எனக்குத் தெரியாமல் ஏதும் லீலை புரியும் கண்ணனா”
“அய்யய்யோ, நீ ஒருத்திதான் என் உயிர். நான் ராமன்.” விரைந்து சொன்னான்
அவன் ராமன் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தும் அதை அவன் வாயால் ஒருமுறை சொல்லக்கேட்டால்தான் நிலாவிற்கு நிம்மதியாக இருந்தது.
இந்த விவகாரமான விஷயத்தை விட்டுத்தள்ள நினைத்தவன் பேச்சை மாற்றினான்
“நான் ஒரு கவிதை சொல்லட்டுமா”
“கவிதைலாம் தெரியுமா உங்களுக்கு”

“என்ன இப்டி கேட்டுட்ட”
“என் கவிதைய கேட்டா வைரமுத்துக்கே வயித்தால போயிடும், தெரியுமா”
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வெடித்துச் சிரித்து விட்டாள். சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தாள்.அவனும் சேர்ந்து சிரித்தான். சிரித்த சிரிப்பில் நிலாவின்
கண்களிலிருந்து கண்ணீரே வந்து விட்டது.
சிரிப்பினால் அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரின் அதே வழித்தடத்தில்தான் சற்று நேரத்தில் கவலையின் கண்ணீர் வழிந்தோடப் போகிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை
நிலாவின் சிரிப்பு வெடித்து சிதறிய சத்தத்தில் நீலக்கடலின் அமைதி நிலைகுலைந்தது. யார் இப்படி சிரிக்கிறார்கள் என்பதை கண்டறிய சத்தம் வந்த இடத்தை நோக்கி புறப்பட்டு வந்தாள் ஒரு கன்னி. யாரோ வருவதை அறிந்த காதலர்கள் இருவரும் நிலைமையை நிதானத்திற்கு கொண்டு வந்தனர்.
“வா கடல் கன்னி” கடல் வரவேற்றது
“நீங்கதான் சிரிச்சதா? சத்தம் கேட்டுச்சேன்னு வந்து பாத்தேன். நல்லா இருக்கீங்களா?”
“நல்லாருக்கேன். நீ எப்டி இருக்க?”
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதில் நிலாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது.
“நல்லாருக்கேன்” என்று பதிலளித்த வேகத்தில் மேலும் காதலர்களை தொந்திரவு செய்ய விரும்பாமல் “சரி நான் வரேன்” என்று விடைபெற்றுக் கிளம்பியது.
“யார் அது? அவளுக்கு உங்களை எப்டி தெரியும்?” வரவேண்டிய கேள்வியெல்லாம் வரிசையாய் வந்தது.
“என்ன கேள்வி இது, நான் பல இடத்தில பரவிக் கிடக்குற கடல், என்ன பல பேருக்குத் தெரியும்”
“ஓ... சரி,உங்களுக்கு அவள எப்டி தெரியும்?”

“வழியில பாத்துருக்கேன்,  சரி தூங்கலாமா?” வாக்குவாதம் வராமல் தடுப்பதற்காக வந்த
கேள்வி இது.
இனிமேல் எனக்கெப்டி தூக்கம் வரும் என்று நினைத்துக்கொண்டே “சரி” என்றாள்.
வலுக்கட்டாயமாக அழைத்தால் வரவே வராத தூக்கத்தை வரவைத்துப் பார்த்தாள்.
வரவில்லை. எழுந்தாள், கூடவே சந்தேகம் எனும் சாத்தானும் எழுந்தது.
“கடல் கன்னினு பேர்லாம் தெரிஞ்சு வச்சிருக்கானே, அவளுக்கு ஏன் கடல் கன்னின்னு பேர்
வந்துச்சு இது அவளோட அம்மா அப்பா வச்ச பேரா? இல்ல, கடல் மேல காதல் வந்து இவளே வச்சுக்கிட்டாளா?”
வீண் சந்தேகம் வாழக்கையை வீணாக்கி விடும் என்று தனக்குத்தானே உபதேசம் செய்து கொண்டு மறுபடி கண் மூடினாள்
கண்ணன் கன்னி என்ற பெயர் பொருத்தம் கண் முன்னே வந்தாடியது
கண் விழித்தாள். காதலனை எழுப்பினாள்.
“நீலக்கண்ணன்னு ஏன் பேர் சொன்னீங்க”
“நீலநிறமா இருக்குறதால நீலக்கண்ணனு சொன்னேன்”
“நீலநிறமா இருந்தா, நீல... வேறு எதாவது சேர்க்க வேண்டியதுதான, ஏன் கண்ணன்னு சேத்தீங்க”
கண்ணைக் கட்டியது அவனுக்கு
“நீல...அப்டினா அடுத்து கண்ணன்னு சேத்தாதான் கரெக்டா இருக்கும்” யோசித்துப் பார்க்காமல் பதிலை விட்டு விட்டான்
“ஏன் நீலகண்டன், நீலமேகம் அப்டிலாம் சேத்தா கரெக்டா இருக்காதா?”
“அப்டியில்ல. கண்ணன்னு வச்சா அழகா இருக்குமேனு வச்சேன்”
“அழகா இருக்கும்னு வச்சீங்களா? அழகு கன்னியோட நினைவா இருக்கும்னு வச்சீங்களா? என்ன பாக்குறீங்க கடல் கன்னியத்தான் சொல்றேன்”
கடல்கன்னி வந்து கதையை கெடுத்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டான்.
“ஒன்றுமே இல்லாத விஷயத்தை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டாளே எப்படி புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டே கண்களை மூடி நொந்தான்”
கண்ணைத் திறந்தவன் கண்ட காட்சியால் அடைந்த அதிர்ச்சியில் இமைகள் இமைப்பதை மறந்து போய் அப்படியே நின்றன
கண்சிமிட்டும் நேரத்திற்குள் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களைக் கடந்து கழுத்தைத் தாண்டியிருந்தது.
கண்ணீரைத் துடைத்து கட்டியணைக்க கடலின் கைகள் விரைந்தன.
“தொடாதீங்க”
கடுங்கோபத்தில் கத்தியதால் கடல் அசையாமல் நின்று விட்டது.
“இதைச் சாதரண விஷயமா நீங்க நினைக்கலாம்; என்னால அப்படி எடுத்துக்க முடியல; என்னால இனிமே இங்க இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு நெஞ்சில் கவசமாக ஒட்டிப்பிறந்த நிலா தன்னை பேர்த்து எடுத்துக் கொண்டு ஆகாயத்தை அடைந்து விட்டது.

கடல் கத்தி தீர்த்தது, அழுது அழுது கண்ணீரே தீர்ந்தது.

“பிரிவைத்தாங்க முடியாம வலிச்சதால  நான் ஒன்னும் தற்கொலைங்கிற தப்பான முடிவெடுத்துடல” காதல் தோல்வியால் கடலில் விழுந்து கதையை முடித்துக் கொள்ள வந்த ஒரு காதலனை தடுத்து காப்பாற்றித் தன் கதையை சொல்லி முடித்தது கடல்.

கதையைக் கேட்டு கலங்கியவன் தற்கொலை முடிவை விட்டு விட்டு கடலோடு மனம் விட்டு பேச ஆரம்பித்தான்
“நிலா போறப்ப தடுத்து நிறுத்தலயா”
“தொடாதீங்கனு சொல்லிட்டதால தடுக்குறதுக்காக கூட தொடாம நின்னுட்டேன்”
“உங்கள விட்டு பிரிஞ்சு போனதுக்கப்புறம் நிலா வேற யாரயாவது...?”
“இல்ல. அவளும் அதுக்கப்புறம் வேற ஒரு உறவ தேடிக்கல, அந்த ஒரு காரணத்துனாலதான் இன்னைக்கு வரைக்கும் அமாவாச, பெளர்ணமியன்னைக்கு எங்களுக்குள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்துக்கிட்டே இருக்குனு நெனைக்கிறேன்”

“சின்ன சந்தேகத்துக்காக இப்டி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே, நிலாவோட சேர்ரதுக்காக நீ அதுக்கப்புறம் முயற்சியே பண்ணலயா”
“பன்னாம இருப்பனா? உண்மையை நிலாவுக்கு சொல்லி புரியவைக்குறதுக்காக லைகா கிட்ட ஹெல்ப் கேட்டு விவரத்த சொல்லி அனுப்புனேன் . ஆனா லைகா ஒரு நன்றி கெட்டநாய். விண்வெளி வரைக்கும் போயிட்டு என் வெண்ணிலாவோட வீட்டுக்கு போவாம வந்துட்டு, ஆம்ஸ்ட்ராங்கிட்ட சொல்லலாம்னு பார்த்தா அவனோ ஆம்பளயா போயிட்டான். சண்டை போட்டு பிரிஞ்சுறுக்குற காதலிக்கிட்ட ஒரு ஆம்பளைய தூது அனுப்புறதுக்கு யோசனையா
இருந்ததால அவன்கிட்ட ஒன்னும் சொல்ல முடியல. அதனால பொண்ணுங்க யாராவது நிலாவுல காலெடுத்து வப்பாங்களானு எதிர்பாத்துக்கிட்டுருக்கேன், என் உடம்போட ஈப்ப்பு விசையால என் நிலாவ எங்கிட்ட இழுத்துடலாம்னு நானும் என்னாலான முயற்சிய பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்”

“உனக்குள்ள இப்டி ஒரு கஷ்டம் இருக்கும்னு நான் நினைக்கல. காதலிக்காம இருக்கவும் முடியல; காதலிச்சுத் தோத்துட்டா இருக்கவும் முடியல. காதல்னாலே வலிக்குதுல்ல?”

“காதல் என்பது முள்ளின் முத்தம். வலிக்கும்” காதல் வலியில் கடலும் கவிதை பேசியது.

“அதுக்காக காதல் முறிஞ்சு போச்சுனா கதையே முடிஞ்சு போச்சுனு முடிவெடுக்குறது தப்பு. கதையோட முடிவ நாம எழுதக்கூடாது. கதைய ஆரம்பிச்ச கதையோட காரணகர்த்தாவுக்குத்தான் அத எப்ப எப்புடி முடிக்கனும்னு தெரியும்”
“ரொம்ப சரியா சொன்ன. லட்சத்துல ஒரு வார்த்தை. நான் வாழ்றதுன்னு முடிவெடுத்துட்டேன். நீ என்ன பண்ண போற” கடலிடம் கேட்டான்.
“முடிக்கிற உரிமைதான் எனக்குக் கிடையாதே தவிர முயற்சி பன்ற உரிமை உண்டு, என் காதலுக்காக கதை முடியுற வரைக்கும் கூட இப்டியே முயற்சி பன்றதா முடிவெடுத்துட்டேன்” 
கடலின் முடிவைக் கேட்டு இப்படியும் ஒரு காதலா என்று வியந்து நின்றவன், தன் உயிரையே காப்பாற்றிய கடலுக்கு, கைம்மாறாக கண்ணீரைத் தவிர வேறொன்றும் காட்ட முடியாத கடனாளியாக கரையில் நின்றான்.

கண்ணீரைக் காட்டியவனின் நெஞ்சை மேலும் கனத்த நெஞ்சமாக்க விரும்பாமல், இது கைம்மாறு வேண்டி செய்யப்பட்ட உதவியல்ல என்பதுபோல்  கடல் சற்று உள்வாங்கியது.

உலகம் அழியும் போது
கடலும் மடிந்து போகும்
நிலவும் உடைந்து போகும்
காலம் முடிந்த பின்னும்
காதல் மட்டும் வாழும்

Monday, 10 September 2012

இரட்டிப்பு சந்தோஷம்


மகிழ்ச்சியோடு வேலைபார்த்துப் பிழைக்காதவன்
மனிதனாய் பிறந்திருக்கத் தேவையில்லை;
மனம் ஒப்பாமல் மண்டியிடாத குறையாய் வாழ்வதற்கு மரித்தே போகலாம்.

ஆனால், மரித்துப் போவதற்கு அல்லவே வாழ்க்கை.
வாழ்வதற்கு. வாழ்ந்து பார்ப்பதற்கு. வாழ்ந்து காட்டுவதற்கும்தான்.

மறுநாள் விடுமுறை என்றால் மனம் மல்லாக்கப் படுத்து சிரிக்கிறது. அதுவே, மறுநாள் வேலைக்குப் போக வேண்டும் என்பதை நினைத்தாலே சிந்தை சீக்கு வந்த கோழியாய் சிதைந்து போகிறதே.
                என்ன வியாதியாக இருக்கும்? இந்த வியாதிக்கு விதை எங்கே விழுந்தது? எப்படி விளைந்தது?
இப்படித்தான்..
                என்ன படிக்கலாம்? ன்ஜினீயரிங்தான். கொஞ்சம் விலை கம்மியா? இருக்கவே இருக்கு ஆசிரியர் பயிற்சி படிப்பு. அதிக வாக்குகள் பெறும் இரண்டு பெரிய கட்சிகள் முடிந்து விட்டன. மீதிபேர் அதிமேதாவிகளின் ஆலோசனைக்கேற்ப பட்டமோ, பட்டயமோ ஆளுக்கொரு பாழுங்கிணற்றைத் தேடி.
                போட்டடித்து படித்து முடித்து வெளியே வந்து பார்த்தால், எந்த படிப்பு படித்திருந்தாலும் எல்லாவற்றையும் ஏமாற்றத்தோடு தூக்கிதூர எறிந்து விட்டு எல்லோரும் சங்கமிக்கும்  ஒரே இடம் போட்டித்தேர்வு.
                அது ஒரு பொசகெட்டத் தேர்வு. போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும், பார்க்கப்போகும் வேலைக்கும் என்னதான் சம்மந்தம் என்று இருபத்திநான்கு மணி நேரமும் யோசிக்கிறேன், இதுநாள் வரை புலப்படவில்லை.
                சம்மந்தம் இல்லாவிட்டாலும், சம்பளத்திற்கும் சாப்பாட்டிற்கும் வழி இருப்பதால் ஏதோ ஒரு கருமத்தைக் கட்டி அழ வேண்டிய கட்டாயம்.
                ஏதோ ஒரு வேலை என்பது ஏனோ ஒட்டவில்லை என்னோடு. பிடிப்பில்லை. பிடிக்கவில்லை.
                விழுந்த விதை விருட்சமாகிவிட்டது.
                இவ்வளவு கஷ்டங்களைத் தாங்கி, இவ்வளவு தடைகளைத் தாண்டி வந்தது இதற்காகத்தானா? கிட்டத்தட்ட வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரமெல்லாம் விருப்பமற்ற வேலையிலா?

                சன்மானத்திற்காக தன்மானத்தை அடமானம் வைக்கும் அவமானம்தான் இந்த கூட்டத்தின் எதிர்காலம் என எனக்கேதும் தெரிந்திருந்தால் எழுதப்படிக்கத் தெரிந்ததோடு எழுந்தோடியிருப்பேனே.
                இவ்வளவுக்கும் மத்தியில் ஒருவன் தன் கனவை கண்டெடுத்துக் கரை சேர்க்க வேண்டும்.
முடியுமா?
                முடியாது. முடியுமா என்ற சந்தேகம் முளைவிட்டாலே முடியாது.
                கண்ணுக்கேத் தெரியாத காற்றின் வழியே கடல் தாண்டி ஒலி அனுப்ப முடியும்என்பதற்கே வழி தேட துணிந்த மனித ஜாதியில் பிறந்தவன் கேட்கக் கூடிய கேள்வியா இது.
                இதுவே என் கருமம், இதைச் செய்வதன்றி வேறு ஏதும் வாழ்க்கையாகவே தோன்றவில்லை எனத் தெளிவுறத் துணிந்தவனுக்கோ காற்றும் கை கொடுக்கும்.
                பிடித்ததை செய்கிறேன் என்று இறங்கி பின்னால் பிழைப்பே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயம். பயம் நியாயமானதுதான். காரணம் பசியாக இருப்பதனால். 
பிடித்ததை செய்யச் சொல்லி மனம் நச்சரிக்கிறது, பிழைப்பைத் தேடச் சொல்லி பசி பயமுறுத்துகிறது. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும் என்ற விதியோ இவ்விடம் பொருந்தாது. பசியை விட்டுக் கொடுத்தால் உயிர் போய் விடும். மனதை விட்டுக் கொடுத்தால் வாழ்க்கையே போய் விடும்.  என் செய்வது? அதிசயங்களும், விசித்திரங்களுமே கட்டான இந்த பிரபஞ்சத்தில்,ஒரு படைப்பாளி தன் படைப்பைத் தின்று பசியாற ஏற்பாடு செய்யப்படவில்லையே! படைப்பாளியின் சிந்தையில், படைக்கும் சிந்தனை சுரக்கும்போது ஒரு ஹார்மோன் சுரக்க வேண்டும், அந்த ஹார்மோன் பசியாற்றும்  ஹார்மோனாக இருக்க வேண்டும். இயற்கையில் இப்படி இருந்திருக்க கூடாதா? இந்தக் கேள்விக்கு பரிணாம வளர்ச்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
  பிடித்ததையே பிழைப்பாக்கிக் கொள்வதைத் தவிர உயிரோடு வாழ்வதற்கு வேறு வழியில்லை. கருவை கலைப்பதைப் போல கனவை கலைத்துவிட்டு பிழைக்கிறவன் எவனும், இந்த உலகில் நானும் இருந்தேன் என்றுதான் சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, நானும் வாழ்ந்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

                சில வாரங்களோ, சில வருடங்களோ என்றால் இந்த சக்கையான வாழ்வை சகித்துக் கொண்டு விடலாம். அரைஜாண் வயிற்றுக்காக ஆயுள்கைதியாக இருப்பதோ அறவே அர்த்தமற்றது. எவ்வளவு காலம்தான் நாட்களை நகர்த்திக்கொண்டே போக முடியும்? நாட்களை நகர்த்த முயற்சிப்பது நரக வாழ்க்கையின் அடையாளம்.
                தன் மனதை இழுக்கும் பாதையில், வாழ்க்கை தனக்காக என்னதான் வைத்திருக்கிறது என்று போய் பார்த்து விட வேண்டும். என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் போகிற போக்கில் வாழ்க்கையே கற்றுக் கொடுக்கும்.
                படைப்புத் திறனைக் கொண்டவன் மனிதன் - அந்த
    படைப்பை வெளிக் கொண்டுவந்துவிட்டால் அவன் படைப்பாளி. இவ்வளவுதான்.
ஆனால் இந்த இவ்வளவுக்குள் எவ்வளவோ அடங்கும். விரக்தியின் விளிம்பில் விதியோடு விளையாடுவதும் இந்த இவ்வளவுக்குள் அடங்கும். அப்படி விளையாடினாலும் தகும். தன் கனவை கரைசேர்க்க நடைபோடுவதைக் காட்டிலும் ஒருவனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். கனவுப் பாதையிலேயேகாலம் முழுக்ககால்கள் கம்பீரமாக நடைபோட்டால் அதுவோ இரட்டிப்பு சந்தோஷம்.

Tuesday, 21 August 2012

விடை தேடி...


வந்த நோக்கம் கண்டறிய வக்கில்லை;

எந்த வேலையாவது ஒருவேலை வாங்கிவிட கட்டாயக்கல்வி

மனித இனம் மடைமையின் உச்சத்தின் வாழும் காலம் போலும்!


காசை கொடுத்து கல்வியை வாங்கும் கல்வியுகம். இது கலியுகத்தை விட மோசமானது.  

 இங்கே சுற்றி வளைத்து எல்லோரும் சொல்வதென்ன

 படி. நன்றா படித்தால்தான் வேலை கிடைக்கும். இதுதானே

 பணம் சம்பாதிக்கத்தான் படிப்பு என்றால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று படிக்க வேண்டியதுதானே? ங்குசந்தையைப் பற்றியும், பண வீக்கத்தைப் பற்றியும் பாடம் வைக்க வேண்டியதுதானே?

இதைக் கேட்டால், "அதெப்படி முடியும்? சிலர் மருத்துவராகலாம், சிலர் இன்ஜீனியராகலாம், சிலர் கவிஞராகலாம், ஆகவே அனைத்துத் துறை அறிவும் அவசியம்; பள்ளிக்கல்வியை முடித்ததும் அவரவருக்கேற்ற துறையில் மேல்படிப்பு படிக்கட்டும்" என்று பூசி மொழுகுகிறார்கள். அவையெல்லாம் அப்பட்டமான பொய்.
                கற்றவன் என்பவன் எவன்?
                தன் பெயருக்குப் பின்னால் தன் பெயரைவிட நீளமாக பட்டங்கனை அடுக்கிச்செல்பவனா? தேர்விற்கு முதல்நாள் முழுப்பொருள் அறியாமல் முக்கிமுக்கி படித்துவிட்டு மறுநாள் வந்து முழுங்கியதை கக்கிவிட்டு செல்பவனா?
                கற்றல் என்பது தேடலாக இருக்க வேண்டும். நீ இன்ன காரணத்திற்காக பிறந்திருக்கிறாய், நீ பயணிக்க வேண்டிய பாதை இதுதான் என்று ஒருவனுக்கு அவனை அடையாளம் காட்ட இயலாத கல்வியை கற்பனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
                பள்ளியையும், கல்லூரியையும் முடித்ததும் சிலபேர்நான் படிப்பையெல்லாம் முடித்துவிட்டேன்என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் முடித்துவிட்டதாக சொல்வது ஆழ்கடலின் ஆழத்தில் உள்ள அரை மணல்துகளின் அளவு கூட கிடையாது.
கற்றல் என்பது,

                 தட்டும் தரையில்லா ஆழத்தைப் போன்றது;

                 முட்டும் முடிவில்லா வானத்தைப் போன்றது.

போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

பள்ளிக்கல்வி என்பது அதற்கான கதவு, முடிவு அல்ல. பள்ளிப்படிப்பை பாதியில் விடுவது மட்டும்தான் இடைநிற்றலா? கற்றலை வாழ்நாளில் எந்தவொரு கட்டத்தில் கைவிட்டாலும் அது இடைநிற்றலே!

ஆதிகாலத்தில் பலஜீவராசிகள் கடுங்குளிராலும், கொதிக்கும் வெப்பத்தாலும் மடிந்து போயின. தன்னை காத்துக்கொள்வது எப்படி என்று அவைகளுக்குகற்றுக்கொள்ளதெரியவில்லை. பரிணாமவளர்ச்சியின் அடுத்தகட்டமாக ஒரு  ஜீவராசி இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தது. அப்போது தெரியாது இந்த  ஜீவராசி ஒருநாள் விண்ணிலும் காலடி எடுத்து வைக்குமென்று.

                காட்டில் மரங்கள் ஒன்றோடொன்று உரச தீப்பற்றியது. அதைப்பார்த்த இந்த புதிய  ஜீவராசியின் சிந்தையிலும் தீப்பற்றியது. யோசிக்கத் தொடங்கியது. இரு கற்களை எடுத்து உரசியது. தீப்பொறி பறந்தது. ஹாபிரமாதம்! பரிணாம வளர்ச்சியின் பாதையில்கற்றுக்கொள்ளும் திறன்படைத்த ஒரு  ஜீவராசி.

விண்ணும் மண்ணும் வியந்தன! காடுகளும் மலைகளும் மலைத்தனபறவைகளும் மிருகங்களும் புருவம் உயர்த்தின! "யாரடா இந்த  ஜீவராசி!!!என்று. அவன்தான் மனிதன்.

                அந்த வியப்புக்கும், மலைப்புக்கும் காரணம் மனிதன்கற்கும் திறன்படைத்திருந்ததுதான்.

                கற்றான். ஒவ்வொரு நாளும் கற்றான். ஒவ்வொரு அசைவிலிருந்தும் கற்றான். விரைவிலேயே தான் நிரந்தரமற்றவன் என்பதையும் கற்றான். தான் கற்ற விஷயங்கள் தன்னோடு சேர்ந்து  மண்ணோடு போய்விடக் கூடாதே என்பதற்காக கற்றதை பாறைகளிலும், குகைகளிலும், ஓலைச்சுவடிகளிலும் பதிவு செய்தான்.

அப்படிப்பட்ட கற்கும் வாய்ப்பை பயன்படுத்தி நல்ல புத்தகங்கள் படித்து வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வழிகாண வேண்டும்.

                போட்டி நிறைந்த உலகம் இது. ங்கே சாதிப்பது என்பது செத்த பாம்பை அடிப்பது போன்ற எளிதான காரியம் அல்ல, மலைப்பாம்புகளின் நடுவில் மல்லுக்கட்ட வேண்டயிருக்கும். போராட்டங்களை சமாளித்து வர, பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.

                பிடித்த துறையில் செல்ல முயலும்போது, நீ சிறுபிள்ளை, வயது போதாது, உனக்கு ஒன்றும் தெரியாது, எதிர்காலம் வீணாகிவிடும் என அச்சுறுத்துகிறார்கள்.

வயது போதாதா?
பத்துமாத கருவாக இருக்கும் போதே, “அம்மா! இந்த உலகை காண நான் தயாராகிவிட்டேன். அதற்கான நேரம் வந்துவிட்டதுஎன்று என் அம்மாவின் வயிற்றில் எட்டி உதைத்து பிரசவவலியை ஏற்படுத்தி என்னை வெளியே வரவிடு என்று நான்”  என் தாய்க்கு சொன்னேன்.

                நான் போகும் வழியில் எனக்கு எவர் வேண்டுமானாலும் வழிகாட்டுங்கள். ஆனால் என்வழியையே காட்ட எவரும் நினைக்காதீர்கள். இது என் வாழ்க்கை, என் பாதை, என் பயணம், என்னை தேர்ந்தெடுக்கவிடுங்கள்.

மனித இனம் முழுமையாக எந்திரமாக மாறுவதற்கு முன் அதை திரும்பவும் வாழ்வின் அழகியலோடு ஒட்டி இயங்கச்செய்து, இயற்கையோடு இயைந்த வாழ்வை தேடும் வழியில் கல்வியை பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட பாதையில் செல்பவனே கற்றவன். 

                சேற்றில் விழுந்து கிடக்கிறோம் பரவாயில்லை. அதற்காக நாம் கிடப்பது சேறு என்பது கூடவா தெரியாமல் கிடப்பது?

                இவற்றையெல்லாம் நினைக்கும்போது மனித இனம், பரிணாம வளர்சியடையாமல் குரங்காகவே இருந்திருக்கலாமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் ஒருவாறு அமைதி அடைகிறேன்சேற்றில்தான் முளைக்கும் செந்தாமரைஎன்பதால்.