மகிழ்ச்சியோடு வேலைபார்த்துப் பிழைக்காதவன்
மனிதனாய் பிறந்திருக்கத் தேவையில்லை;
மனம் ஒப்பாமல் மண்டியிடாத குறையாய் வாழ்வதற்கு மரித்தே போகலாம்.
ஆனால், மரித்துப் போவதற்கு அல்லவே வாழ்க்கை.
வாழ்வதற்கு. வாழ்ந்து பார்ப்பதற்கு. வாழ்ந்து காட்டுவதற்கும்தான்.
மறுநாள் விடுமுறை என்றால் மனம் மல்லாக்கப் படுத்து சிரிக்கிறது. அதுவே, மறுநாள் வேலைக்குப் போக வேண்டும் என்பதை நினைத்தாலே சிந்தை சீக்கு வந்த கோழியாய் சிதைந்து போகிறதே.
என்ன வியாதியாக இருக்கும்? இந்த வியாதிக்கு விதை எங்கே விழுந்தது? எப்படி விளைந்தது?
இப்படித்தான்..
என்ன படிக்கலாம்? இன்ஜினீயரிங்தான். கொஞ்சம் விலை கம்மியா? இருக்கவே இருக்கு ஆசிரியர் பயிற்சி படிப்பு. அதிக வாக்குகள் பெறும் இரண்டு பெரிய கட்சிகள் முடிந்து விட்டன. மீதிபேர் அதிமேதாவிகளின் ஆலோசனைக்கேற்ப பட்டமோ, பட்டயமோ ஆளுக்கொரு பாழுங்கிணற்றைத் தேடி.
போட்டடித்து படித்து முடித்து வெளியே வந்து பார்த்தால், எந்த படிப்பு படித்திருந்தாலும் எல்லாவற்றையும் ஏமாற்றத்தோடு தூக்கிதூர எறிந்து விட்டு எல்லோரும் சங்கமிக்கும் ஒரே இடம் போட்டித்தேர்வு.
அது ஒரு பொசகெட்டத் தேர்வு. போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும், பார்க்கப்போகும் வேலைக்கும் என்னதான் சம்மந்தம் என்று இருபத்திநான்கு மணி நேரமும் யோசிக்கிறேன், இதுநாள் வரை புலப்படவில்லை.
சம்மந்தம் இல்லாவிட்டாலும், சம்பளத்திற்கும் சாப்பாட்டிற்கும் வழி இருப்பதால் ஏதோ ஒரு கருமத்தைக் கட்டி அழ வேண்டிய கட்டாயம்.
ஏதோ ஒரு வேலை என்பது ஏனோ ஒட்டவில்லை என்னோடு. பிடிப்பில்லை. பிடிக்கவில்லை.
விழுந்த விதை விருட்சமாகிவிட்டது.
இவ்வளவு கஷ்டங்களைத் தாங்கி, இவ்வளவு தடைகளைத் தாண்டி வந்தது இதற்காகத்தானா? கிட்டத்தட்ட வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரமெல்லாம் விருப்பமற்ற வேலையிலா?
சன்மானத்திற்காக தன்மானத்தை அடமானம் வைக்கும் அவமானம்தான் இந்த கூட்டத்தின் எதிர்காலம் என எனக்கேதும் தெரிந்திருந்தால் எழுதப்படிக்கத் தெரிந்ததோடு எழுந்தோடியிருப்பேனே.
இவ்வளவுக்கும் மத்தியில் ஒருவன் தன் கனவை கண்டெடுத்துக் கரை சேர்க்க வேண்டும்.
முடியுமா?
முடியாது. முடியுமா என்ற சந்தேகம் முளைவிட்டாலே முடியாது.
“கண்ணுக்கேத் தெரியாத காற்றின் வழியே கடல் தாண்டி ஒலி அனுப்ப முடியும்” என்பதற்கே வழி தேட துணிந்த மனித ஜாதியில் பிறந்தவன் கேட்கக் கூடிய கேள்வியா இது.
இதுவே என் கருமம், இதைச் செய்வதன்றி வேறு ஏதும் வாழ்க்கையாகவே தோன்றவில்லை எனத் தெளிவுறத் துணிந்தவனுக்கோ காற்றும் கை கொடுக்கும்.
பிடித்ததை செய்கிறேன் என்று இறங்கி பின்னால் பிழைப்பே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயம். பயம் நியாயமானதுதான். காரணம் பசியாக இருப்பதனால்.
பிடித்ததை செய்யச் சொல்லி மனம் நச்சரிக்கிறது, பிழைப்பைத் தேடச் சொல்லி பசி பயமுறுத்துகிறது. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும் என்ற விதியோ இவ்விடம் பொருந்தாது. பசியை விட்டுக் கொடுத்தால் உயிர் போய் விடும். மனதை விட்டுக் கொடுத்தால் வாழ்க்கையே போய் விடும். என் செய்வது? அதிசயங்களும், விசித்திரங்களுமே கட்டான இந்த பிரபஞ்சத்தில்,ஒரு படைப்பாளி தன் படைப்பைத் தின்று பசியாற ஏற்பாடு செய்யப்படவில்லையே! படைப்பாளியின் சிந்தையில், படைக்கும் சிந்தனை சுரக்கும்போது ஒரு ஹார்மோன் சுரக்க வேண்டும், அந்த ஹார்மோன் பசியாற்றும் ஹார்மோனாக இருக்க வேண்டும். இயற்கையில் இப்படி இருந்திருக்க கூடாதா? இந்தக் கேள்விக்கு பரிணாம வளர்ச்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
பிடித்ததையே பிழைப்பாக்கிக் கொள்வதைத் தவிர உயிரோடு வாழ்வதற்கு வேறு வழியில்லை. கருவை கலைப்பதைப் போல கனவை கலைத்துவிட்டு பிழைக்கிறவன் எவனும், இந்த உலகில் நானும் இருந்தேன் என்றுதான் சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, நானும் வாழ்ந்தேன் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
சில வாரங்களோ, சில வருடங்களோ என்றால் இந்த சக்கையான வாழ்வை சகித்துக் கொண்டு விடலாம். அரைஜாண் வயிற்றுக்காக ஆயுள்கைதியாக இருப்பதோ அறவே அர்த்தமற்றது. எவ்வளவு காலம்தான் நாட்களை நகர்த்திக்கொண்டே போக முடியும்? நாட்களை நகர்த்த முயற்சிப்பது நரக வாழ்க்கையின் அடையாளம்.
தன் மனதை இழுக்கும் பாதையில், வாழ்க்கை தனக்காக என்னதான் வைத்திருக்கிறது என்று போய் பார்த்து விட வேண்டும். என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் போகிற போக்கில் வாழ்க்கையே கற்றுக் கொடுக்கும்.
படைப்புத் திறனைக் கொண்டவன் மனிதன் - அந்த
படைப்பை வெளிக் கொண்டுவந்துவிட்டால் அவன் படைப்பாளி. இவ்வளவுதான்.
ஆனால் இந்த இவ்வளவுக்குள் எவ்வளவோ அடங்கும். விரக்தியின் விளிம்பில் விதியோடு விளையாடுவதும் இந்த இவ்வளவுக்குள் அடங்கும். அப்படி விளையாடினாலும் தகும். தன் கனவை கரைசேர்க்க நடைபோடுவதைக் காட்டிலும் ஒருவனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். கனவுப் பாதையிலேயே ‘காலம் முழுக்க’ கால்கள் கம்பீரமாக நடைபோட்டால் அதுவோ இரட்டிப்பு சந்தோஷம்.
No comments:
Post a Comment