உலக உருண்டை வெறும் உடல் - இந்த
உடலுக்கு உயிர் கொடுத்தது கடல்.
கடல்தான் இக்கதையின் கதாநாயகன். தன் வளங்களை வாரி வழங்குவதில் கடல் ஒரு கர்ணன்.கர்ணனோடு ஒட்டிப்பிறந்த கவச குண்டலத்தைப் போல் கடலின் நெஞ்சோடு ஒட்டிப் பிறந்திருந்தாள் ஒருத்தி. பல பெயர் கொண்ட இவளின் பெயர்களில் பலருக்கும் பரிச்சையமான பெயர் நிலா. இவள்தான் இந்த காதல் கதையின் கதாநாயகி.
அன்றொரு இரவில் அந்த காதலர்களுக்கு வாய்த்த சூழல் இலக்கியமானது. ஆழ்கடலின் அடியில் ஆள்அரவமற்ற அமைதி, வெட்கத்தின் வேலிபோடும் வேலையை மிச்சப்படுத்தும் இருட்டு, இரவு நேரத்திற்கு இனிமை சேர்க்கும் விதமாக கடலின் இரைச்சல் பின்னனி இசை. இருட்டுக்கு வெளிச்சமாய் வெண்ணிலவின் முகம் பிரகாசித்தது. கடலின் மடியில், நிலா மயக்கத்தில். இருட்டில் இருந்தும் அதுவும் இவ்வளவு இருக்கத்தில் இருந்தும் பால்நிலவுடன் தேன்நிலவு கொண்டாட முடியாமல் தவித்தான். காரணம், காதலன் இன்னும் கணவனாகவில்லை. இந்த எல்லைக்கோடு கண்டிப்பான காதலியின் கட்டளையா? இல்லை, கணவனான பிறகுதான் கரையைக் கடப்பது என்ற கடலின் கண்ணியமா? இரண்டுமேதான் எனும்படி நேர்த்தியான காதல் இது.
“நிலா”
“ம்..”
“எதாவது பேசேன்”
“ம்ஹூம்”
“ஏன் எதாவது கோவமா”
“ஆமா, உங்கள கடல்னு கூப்பிடுறதுக்கு நல்லால்ல வேற ஒரு நல்ல பேரா வைங்கனு எத்தன தடவ சொல்றேன் வச்சீங்களா”
“ஓ.. அதான் கோவமா. சரி இப்பவே ஒரு பேர் வச்சிடலாம்”
கொஞ்சும் நேரத்தில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசித்து ஒரு பெயர் சொன்னான்.
நான் நீலநிறமாக இருப்பதால் நீலக்கண்ணன் என்று கூப்பிடேன்
“கண்ணனா, எனக்குத் தெரியாமல் ஏதும் லீலை புரியும் கண்ணனா”
“அய்யய்யோ, நீ ஒருத்திதான் என் உயிர். நான் ராமன்.” விரைந்து சொன்னான்
அவன் ராமன் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தும் அதை அவன் வாயால் ஒருமுறை சொல்லக்கேட்டால்தான் நிலாவிற்கு நிம்மதியாக இருந்தது.
இந்த விவகாரமான விஷயத்தை விட்டுத்தள்ள நினைத்தவன் பேச்சை மாற்றினான்
“நான் ஒரு கவிதை சொல்லட்டுமா”
“கவிதைலாம் தெரியுமா உங்களுக்கு”
“என்ன இப்டி கேட்டுட்ட”
“என் கவிதைய கேட்டா வைரமுத்துக்கே வயித்தால போயிடும், தெரியுமா”
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வெடித்துச் சிரித்து விட்டாள். சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தாள்.அவனும் சேர்ந்து சிரித்தான். சிரித்த சிரிப்பில் நிலாவின்
கண்களிலிருந்து கண்ணீரே வந்து விட்டது.
சிரிப்பினால் அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரின் அதே வழித்தடத்தில்தான் சற்று நேரத்தில் கவலையின் கண்ணீர் வழிந்தோடப் போகிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை
நிலாவின் சிரிப்பு வெடித்து சிதறிய சத்தத்தில் நீலக்கடலின் அமைதி நிலைகுலைந்தது. யார் இப்படி சிரிக்கிறார்கள் என்பதை கண்டறிய சத்தம் வந்த இடத்தை நோக்கி புறப்பட்டு வந்தாள் ஒரு கன்னி. யாரோ வருவதை அறிந்த காதலர்கள் இருவரும் நிலைமையை நிதானத்திற்கு கொண்டு வந்தனர்.
“வா கடல் கன்னி” கடல் வரவேற்றது
“நீங்கதான் சிரிச்சதா? சத்தம் கேட்டுச்சேன்னு வந்து பாத்தேன். நல்லா இருக்கீங்களா?”
“நல்லாருக்கேன். நீ எப்டி இருக்க?”
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதில் நிலாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது.
“நல்லாருக்கேன்” என்று பதிலளித்த வேகத்தில் மேலும் காதலர்களை தொந்திரவு செய்ய விரும்பாமல் “சரி நான் வரேன்” என்று விடைபெற்றுக் கிளம்பியது.
“யார் அது? அவளுக்கு உங்களை எப்டி தெரியும்?” வரவேண்டிய கேள்வியெல்லாம் வரிசையாய் வந்தது.
“என்ன கேள்வி இது, நான் பல இடத்தில பரவிக் கிடக்குற கடல், என்ன பல பேருக்குத் தெரியும்”
“ஓ... சரி,உங்களுக்கு அவள எப்டி தெரியும்?”
“வழியில பாத்துருக்கேன், சரி தூங்கலாமா?” வாக்குவாதம் வராமல் தடுப்பதற்காக வந்த
கேள்வி இது.
இனிமேல் எனக்கெப்டி தூக்கம் வரும் என்று நினைத்துக்கொண்டே “சரி” என்றாள்.
வலுக்கட்டாயமாக அழைத்தால் வரவே வராத தூக்கத்தை வரவைத்துப் பார்த்தாள்.
வரவில்லை. எழுந்தாள், கூடவே சந்தேகம் எனும் சாத்தானும் எழுந்தது.
“கடல் கன்னினு பேர்லாம் தெரிஞ்சு வச்சிருக்கானே, அவளுக்கு ஏன் கடல் கன்னின்னு பேர்
வந்துச்சு இது அவளோட அம்மா அப்பா வச்ச பேரா? இல்ல, கடல் மேல காதல் வந்து இவளே வச்சுக்கிட்டாளா?”
வீண் சந்தேகம் வாழக்கையை வீணாக்கி விடும் என்று தனக்குத்தானே உபதேசம் செய்து கொண்டு மறுபடி கண் மூடினாள்
கண்ணன் கன்னி என்ற பெயர் பொருத்தம் கண் முன்னே வந்தாடியது
கண் விழித்தாள். காதலனை எழுப்பினாள்.
“நீலக்கண்ணன்னு ஏன் பேர் சொன்னீங்க”
“நீலநிறமா இருக்குறதால நீலக்கண்ணனு சொன்னேன்”
“நீலநிறமா இருந்தா, நீல... வேறு எதாவது சேர்க்க வேண்டியதுதான, ஏன் கண்ணன்னு சேத்தீங்க”
கண்ணைக் கட்டியது அவனுக்கு
“நீல...அப்டினா அடுத்து கண்ணன்னு சேத்தாதான் கரெக்டா இருக்கும்” யோசித்துப் பார்க்காமல் பதிலை விட்டு விட்டான்
“ஏன் நீலகண்டன், நீலமேகம் அப்டிலாம் சேத்தா கரெக்டா இருக்காதா?”
“அப்டியில்ல. கண்ணன்னு வச்சா அழகா இருக்குமேனு வச்சேன்”
“அழகா இருக்கும்னு வச்சீங்களா? அழகு கன்னியோட நினைவா இருக்கும்னு வச்சீங்களா? என்ன பாக்குறீங்க கடல் கன்னியத்தான் சொல்றேன்”
கடல்கன்னி வந்து கதையை கெடுத்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டான்.
“ஒன்றுமே இல்லாத விஷயத்தை இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டாளே எப்படி புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டே கண்களை மூடி நொந்தான்”
கண்ணைத் திறந்தவன் கண்ட காட்சியால் அடைந்த அதிர்ச்சியில் இமைகள் இமைப்பதை மறந்து போய் அப்படியே நின்றன
கண்சிமிட்டும் நேரத்திற்குள் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் கன்னங்களைக் கடந்து கழுத்தைத் தாண்டியிருந்தது.
கண்ணீரைத் துடைத்து கட்டியணைக்க கடலின் கைகள் விரைந்தன.
“தொடாதீங்க”
கடுங்கோபத்தில் கத்தியதால் கடல் அசையாமல் நின்று விட்டது.
“இதைச் சாதரண விஷயமா நீங்க நினைக்கலாம்; என்னால அப்படி எடுத்துக்க முடியல; என்னால இனிமே இங்க இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு நெஞ்சில் கவசமாக ஒட்டிப்பிறந்த நிலா தன்னை பேர்த்து எடுத்துக் கொண்டு ஆகாயத்தை அடைந்து விட்டது.
கடல் கத்தி தீர்த்தது, அழுது அழுது கண்ணீரே தீர்ந்தது.
“பிரிவைத்தாங்க முடியாம வலிச்சதால நான் ஒன்னும் தற்கொலைங்கிற தப்பான முடிவெடுத்துடல” காதல் தோல்வியால் கடலில் விழுந்து கதையை முடித்துக் கொள்ள வந்த ஒரு காதலனை தடுத்து காப்பாற்றித் தன் கதையை சொல்லி முடித்தது கடல்.
கதையைக் கேட்டு கலங்கியவன் தற்கொலை முடிவை விட்டு விட்டு கடலோடு மனம் விட்டு பேச ஆரம்பித்தான்
“நிலா போறப்ப தடுத்து நிறுத்தலயா”
“தொடாதீங்கனு சொல்லிட்டதால தடுக்குறதுக்காக கூட தொடாம நின்னுட்டேன்”
“உங்கள விட்டு பிரிஞ்சு போனதுக்கப்புறம் நிலா வேற யாரயாவது...?”
“இல்ல. அவளும் அதுக்கப்புறம் வேற ஒரு உறவ தேடிக்கல, அந்த ஒரு காரணத்துனாலதான் இன்னைக்கு வரைக்கும் அமாவாச, பெளர்ணமியன்னைக்கு எங்களுக்குள்ள ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்துக்கிட்டே இருக்குனு நெனைக்கிறேன்”
“சின்ன சந்தேகத்துக்காக இப்டி ஒரு முடிவ எடுத்துட்டாங்களே, நிலாவோட சேர்ரதுக்காக நீ அதுக்கப்புறம் முயற்சியே பண்ணலயா”
“பன்னாம இருப்பனா? உண்மையை நிலாவுக்கு சொல்லி புரியவைக்குறதுக்காக லைகா கிட்ட ஹெல்ப் கேட்டு விவரத்த சொல்லி அனுப்புனேன் . ஆனா லைகா ஒரு நன்றி கெட்டநாய். விண்வெளி வரைக்கும் போயிட்டு என் வெண்ணிலாவோட வீட்டுக்கு போவாம வந்துட்டு, ஆம்ஸ்ட்ராங்கிட்ட சொல்லலாம்னு பார்த்தா அவனோ ஆம்பளயா போயிட்டான். சண்டை போட்டு பிரிஞ்சுறுக்குற காதலிக்கிட்ட ஒரு ஆம்பளைய தூது அனுப்புறதுக்கு யோசனையா
இருந்ததால அவன்கிட்ட ஒன்னும் சொல்ல முடியல. அதனால பொண்ணுங்க யாராவது நிலாவுல காலெடுத்து வப்பாங்களானு எதிர்பாத்துக்கிட்டுருக்கேன், என் உடம்போட ஈப்ப்பு விசையால என் நிலாவ எங்கிட்ட இழுத்துடலாம்னு நானும் என்னாலான முயற்சிய பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்”
“உனக்குள்ள இப்டி ஒரு கஷ்டம் இருக்கும்னு நான் நினைக்கல. காதலிக்காம இருக்கவும் முடியல; காதலிச்சுத் தோத்துட்டா இருக்கவும் முடியல. காதல்னாலே வலிக்குதுல்ல?”
“காதல் என்பது முள்ளின் முத்தம். வலிக்கும்” காதல் வலியில் கடலும் கவிதை பேசியது.
“அதுக்காக காதல் முறிஞ்சு போச்சுனா கதையே முடிஞ்சு போச்சுனு முடிவெடுக்குறது தப்பு. கதையோட முடிவ நாம எழுதக்கூடாது. கதைய ஆரம்பிச்ச கதையோட காரணகர்த்தாவுக்குத்தான் அத எப்ப எப்புடி முடிக்கனும்னு தெரியும்”
“ரொம்ப சரியா சொன்ன. லட்சத்துல ஒரு வார்த்தை. நான் வாழ்றதுன்னு முடிவெடுத்துட்டேன். நீ என்ன பண்ண போற” கடலிடம் கேட்டான்.
“முடிக்கிற உரிமைதான் எனக்குக் கிடையாதே தவிர முயற்சி பன்ற உரிமை உண்டு, என் காதலுக்காக கதை முடியுற வரைக்கும் கூட இப்டியே முயற்சி பன்றதா முடிவெடுத்துட்டேன்”
கடலின் முடிவைக் கேட்டு இப்படியும் ஒரு காதலா என்று வியந்து நின்றவன், தன் உயிரையே காப்பாற்றிய கடலுக்கு, கைம்மாறாக கண்ணீரைத் தவிர வேறொன்றும் காட்ட முடியாத கடனாளியாக கரையில் நின்றான்.
கண்ணீரைக் காட்டியவனின் நெஞ்சை மேலும் கனத்த நெஞ்சமாக்க விரும்பாமல், இது கைம்மாறு வேண்டி செய்யப்பட்ட உதவியல்ல என்பதுபோல் கடல் சற்று உள்வாங்கியது.
கண்ணீரைக் காட்டியவனின் நெஞ்சை மேலும் கனத்த நெஞ்சமாக்க விரும்பாமல், இது கைம்மாறு வேண்டி செய்யப்பட்ட உதவியல்ல என்பதுபோல் கடல் சற்று உள்வாங்கியது.
உலகம் அழியும் போது
கடலும் மடிந்து போகும்
நிலவும் உடைந்து போகும்
காலம் முடிந்த பின்னும்
காதல் மட்டும் வாழும்
கடலும் மடிந்து போகும்
நிலவும் உடைந்து போகும்
காலம் முடிந்த பின்னும்
காதல் மட்டும் வாழும்